ஐநா மனித உரிமைகள் குழு, எதிர்வரும் ஒக்டோபரில் கூடும் போது இலங்கையில் போரின் போது பொதுமக்களின் இறப்புக்கள் குறித்து இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணைகளின் முன்னேற்றம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, தமது 112வது அமர்வை எதிர்வரும் ஒக்டோபர் 7 முதல் 31வரை நடத்தவுள்ளது.
இதன்போது 7ம் 8ம் திகதிகளில் இலங்கை, புருண்டி, ஹெய்ட்டி, மோல்ட்டா, மொன்டிநெக்ரோ ஆகிய நாடுகளின் அறிக்கைகள் பரிசீலிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே அரசாங்கம், தமது ஐந்தாவது அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இதில் 2003ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையான முன்னேற்றங்கள் காட்டப்பட்டுள்ளன.
எனினும் மனித உரிமைகள் குழு, அரசாஙகம் மனித உரிமை மீறல் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறது.
மனித உரிமைகளை காப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இதற்காக சர்வதேச உதவிகளை அரசாங்கம் பெற்றுக்கொண்டதா?
மாறுபட்ட இனங்களுக்கு இடையில் ஒத்துழைப்புகள் குறித்தும் மனித உரிமை மேம்பாடு குறித்தும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எவை?
சனல் 4 சுமத்திய குற்றச்சாட்டின்படி போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையின் முடிவு என்ன?
இதனைத்தவிர கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றங்கள் எவை?
சரத் பொன்சேகா, அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டமை மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவை தொடர்பிலும் மனித உரிமைகள் குழு கேள்விகளை எழுப்பி வருகிறது.