காணாமற்போனவர்கள் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு, காணாமற்போனவர்கள் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியிருக்கலாம் என்று நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும், மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவிடம், 20 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த ஆணைக்குழு வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களில் அமர்வுகளை நடத்தி, விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், காணாமற்போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கு உள்ளூர் மட்டத்தில் பெரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில், தமது இயலாமையை மறைப்பதற்காக வெளிநாடுகளின் மீது பழியைப் போடும் முயற்சியில் இறங்கியுள்ளது.
காணாமற்போனவர்கள், வெளிநாடுகளில் அரசியல் தங்சம் கோரியிருக்கலாம் அல்லது அகதிகளாக தஞ்சமடைந்திருப்பலாம் என்றும், எனவே, வெளிநாடுகளில் புகலிடம் தேடியவர்களின் விபரங்களை வெளிப்படுத்துமாறும் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம கோரியிருக்கிறார்.
வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியுள்ள ஆயிரக்கணக்கானோரில், உள்ளூர் அகதி முகாமிகளில் இருந்து இரகசியமாகத் தப்பிச் சென்றவர்களும் அடங்கியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளிப்படுத்த அந்த நாடுகள் மறுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அவ்வாறு தஞ்சமடைந்தோரின் பெயர், விபரங்களை வெளிப்படுத்துவது, சட்டச்சக்கல்களை ஏற்படுத்தும் என்றும், அவர்களின் உறவினர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், குறித்த நாடுகள் கூறிவருவதாகவும் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.
இத்தகைய தகவல்களைப் பெறுவதிற்கு வழியில்லாத நிலையில், வேறு வழிமுறைகளின் ஊடாக தமக்குத் தேவையான தகவல்களை சேகரித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பெரும்பாலான அகதிகள் முதலில் சிறிலங்காவில் இருந்து தமிழ்நாட்டுக்குச் சென்று அங்கிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், அவ்வாறு சென்றவர்களுள் காணாமற்போனவர்களும் அடங்கியிருக்கலாம் என்றும் அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.