இந்திய பிரதமரை எதிர்பார்க்கும் இலங்கையர்கள் – நாட்டுக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

modi_mahinda_jaya_001இலங்கையர்கள் எதிர்ப்பார்ப்பதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி இலங்கைக்கு வரவேண்டும் என்று இலங்கை மக்கள் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்தியாளர்களை நேற்று சந்தித்தபோதே ஜனாதிபதி இதனைக்குறிப்பிட்டார்.

சீன ஜனாதிபதி, ஜப்பானிய பிரதம மந்திரி ஆகியோர் இலங்கைக்கு வரும் போது ஏன் இந்திய பிரதமருக்கு இலங்கை வரமுடியாது என்று இலங்கை மக்கள் கேட்பதாகவும் மஹிந்த தெரிவித்தார்.

பதவியேற்பு நிகழ்வின் பின்னர் தாம் மோடிக்கு அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் நவம்பரில் நடைபெறும் சார்க் மாநாட்டின்போதும் மோடியை சந்திக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணவேண்டாம் என்று இந்திய மத்திய அரசாங்கத்துக்கு தமிழகத்தில் அழுத்தம் கொடுக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த, அனைத்தும் அரசியல். அவற்றுக்கு தாம் முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பதில்லை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதால் வடக்கு மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த காலங்களில் நான்கு ஐந்து தடவைகள் விடுதலைப்புலிகள் மீளெழுச்சி பெற்றமையை மறக்கமுடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மகிந்த ராஜபக்சவின் பாகிஸ்தான் பயணம் தாமதமாகும்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாகிஸ்தான் விஜயம் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் ஏற்பட்டுள்ள இயல்பற்ற அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவிருந்தார்.

இஸ்லாமாபாத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமையால், அதன் அடுத்தக்கட்டங்களை பொறுத்தே பாகிஸ்தானிய விஜயம் அமையும் என்று ஜனாதிபதி செயலக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

TAGS: