தமிழினத்தை ஓரம்கட்ட அரசிற்கு முட்டுக் கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்: கலையரசன் சீற்றம்

navithanveli_kalaiyarasan_001முஸ்லிம்கள் அரசுக்கு முட்டுக் கொடுத்து அமைச்சர் பதவிகளையும் உயர் பதவிகளையும் பெற்றுக் கொண்டு தமிழினத்தை அரசுடன் இணைந்து ஓரம் கட்டுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

நாவிதன்வெளி 11ம் கிராம கிரீன் லைட் விளையாட்டு கழகத்தின் 38ம் நிறைவை கொண்டாடும் விழா கடந்த 17ம் திகதி நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.குணரெட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகம் சென்றவர்களையும் 5 ம் ஆண்டுபுலமைப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களையும் பாராட்டி பரிசில்கள் வழங்கப்பட்டன.

இதன் போது தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன்,

குறிப்பிட்ட காலத்தில் சம்மாந்துறையில் இருந்து பிரிந்து 2006ல் தனியான பிரதேச சபையாக வந்ததன்பின்னர் இந்தக் கிராமம் உட்பட எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பல கிராமங்கள் அபிவிருத்தியில் முன்னேற்றங்களை கண்டுள்ளது.

எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் இந்த நாவிதன்வெளி பிரதேச சபை இருப்பதனாலேயே அரசசார்பற்ற நிறுவனங்களான நெல்சிப், ஜெக்கா போன்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டினால் பாரிய வீதிகளை எமது பிரதேசத்தில் புனரமைக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

2013ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடித்ததன் காரணமாக கடந்த 6 மாதங்களாக எமது நாவிதன்வெளி பிரதேச சபையினால் எந்த அபிவிருத்திகளையும் செய்ய முடியாதிருந்தது.

இது யாரால் ஏன் என்பவற்றிற்கான பதிலும் இதற்கு பின்னால் இருந்து செயற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த எடுத்த முயற்சியும் தற்போது அது வெளிச்சமாகியுள்ளதையும் இங்குள்ள மக்கள் அறிவர்.

எமது கட்சி அபிவிருத்தியை இலக்காக கொண்டு அரசியல் செய்வதில்லை. எமது இலக்கு மக்களின் உரிமையை பெற்று சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்காகபேவ பல அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆனாலும் எமது பிரதேசங்களில் அடிப்படை தேவைகளாக இருக்கும் அத்தனை தேவையான அபிவிருத்திகளையும் எம்மால் முடிந்தவரை செய்துகொண்டுதான் வருகின்றோம்.

சிறுபான்மை இனத்தவருக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளை அரசு தன் ஆதிக்கத்தை கொண்டு அடக்கி ஆளவேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கின்றது.

இன்று சர்வதேசத்தின் பார்வை எம் பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு காரணமான லட்சக்கணக்கான உயிர்களை தியாகம் செய்தவர்களை என்றும் எம்மால் மறக்க முடியாது. அரசு சர்வதேசத்திற்கு ஒருமுகமும் இங்கே ஒருமுகமும் காட்டிக் கொண்டு இருக்கின்றது.

அதுவிரைவில் ஒருமுகமாக மாற்றமடையும் அதுவரை எம் மக்கள் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பக்கபலமாக இருப்பதோடு, எமது கல்வி கலாசாரத்துடன் விளையாட்டிலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். -http://www.tamilwin.com

TAGS: