டில்லியிலிருந்து சம்பந்தன் குழுவினர் தமிழ்நாட்டிற்கு திடீர் விஜயம்!

tna_meet_modi_100இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடில்லியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நேரில் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்திய சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நேற்று அங்கிருந்து திடீரென தமிழகத்திற்குப் பயணமாகினர்.

சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குச் சென்றுள்ளனர்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகியோர் நேற்றிரவு நாடு திரும்பினர்.

தமிழக விஜயத்தின் போது அ.தி.மு.க. உட்பட இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடுவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர்கள் சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று டில்லி சென்ற கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான மன்மோகன் சிங் ஆகியோரை அவர்கள் சந்தித்திருந்தனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா ஆகிய எம்.பிக்களே நேற்றிரவு நாடு திரும்பினர்.

சம்பந்தன், சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய எம்.பிக்கள் நேற்றுப் புதுடில்லியிருந்து திடீரென சென்னைக்குச் சென்றுள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக அரசும் தமிழக மக்களும் குரல்கொடுத்து வருவது நம்பிக்கையைத் தருகிறது. ஆனாலும், அனைவரும் இந்திய மத்திய அரசுடன் சேர்ந்து ஒருமித்துக் குரல் கொடுத்தால் அது தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளனர்” என்று நேற்று முன்தினம் சனிக்கிழமை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தன் தனது அதிமேதாவிதனத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்: சிங்கள ஊடகம்

sambanthanதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது அதிமேதாவித் தனத்தை நிறுத்திக்கொள்ள வேண்டுமென அரச சார்பு ஊடகமான தினமின தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அந்நாட்டு அரசாங்கம் கன்னத்தில் அறைந்துள்ளது.

ஒரு வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த விஜயத்தை “ பொல்லைக் கொடுத்து அடி வாங்கும்” நடவடிக்கையாகவே நோக்க வேண்டும்.

கூட்டமைப்பு பிரதிநிதிளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் வழங்கிய பதில் மனோ கணேசன் போன்ற கோமாளிகளின் வாய்ச்சவடால்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை.

தமிழ் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து இலங்கை அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய இந்தியாவுக்கு அவசியமில்லை.

இலங்கை விவகாரங்களில் சர்வதேசம் தலையீடு செய்வதனையும் இந்தியா விரும்பவில்லை.

தமிழ் மக்களின் நோக்கம் எதுவாக இருந்தது?

போர்க்குற்றச் செயல்கள் தொடர்வில் சர்வதேச விசாரணை, மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தது.

அனைத்து விடயங்களிலும் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், அது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவொரு நோக்கமும் இந்திய விஜயத்தின் போது நிறைவேறவில்லை.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கம் நேரடி கொள்கைகளை பின்பற்றி வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழக அரசாங்கம் ஆகியனவற்றின் அழுத்தங்களினால் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படப் போவதில்லை.

நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் தங்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு தப்புக் கணக்கு போட்டது.

பாரதீய ஜனதா கட்சி இந்து அடிப்படைவாதகொள்கைகைள பின்பற்றும் என கருதியது.

இலங்கையுடன் அடிக்கடி முரண்பாட்டு நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்தது.  எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முட்டாள்தனமான எண்ணங்கள் எதுவும் ஈடேறவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அபிலாஷைகளின் பின்னணில் தமிழ் இனவாத கொள்கைகளைப் பின்பற்றும் நவனீதம்பிள்ளையும், தமிழ் புலம்பெயர் சமூகமும் செயற்பட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பிழையான கொள்கைகளை பின்பற்றியிருந்தது.

தமிழ் இனவாதத்தை தூண்டுவதனையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதனையுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையாக கொண்டிருந்தது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு அடி பணிந்திருந்தார். எனினும் நரேந்திர மோடி இவ்வாறான அழுத்தங்களுக்கு அடி பணிய மாட்டார்.

தமிழ் புலம்பெயர் சமூகத்தின் கைப்பொம்மையாக மோடி செயற்படமாட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை இந்திய பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை என தினமினவின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தை சந்திப்பதற்கு முன்னதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் சந்திப்பு நடத்தியமை அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் நேரடியாகவே எதிர்ப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

TAGS: