ஐ.நா விசாரணை! சாட்சியாளரை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்கள் கோரிக்கை

UNHRC-vote-32ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பவர்கள் எவரும் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 6 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன

இந்தக் கோரிக்கை உள்ளிட்ட கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவர்ää அதன் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள்; மற்றும் இலங்கை அரசாங்க பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சர்வதேச ஜூரிகள் குழு, சர்வதேச மன்னிப்புச்சபை,  மனித உரிமைகளுக்கான ஆசிய பேரவை,  சிவிக்கஸ் அமைப்பு, புறக்கணிப்புகளுக்கு எதிரான சர்வதேச இயக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை என்பன இந்தக்கடிதத்தை அனுப்பியுள்ளன.

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை காப்பாளர்கள் மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.

பெரும்பாலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் உறவைக்கொண்டுள்ள மனித உரிமைக்காப்பாளர்கள் மீதே இந்த இலக்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கு தகவல்களை வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மனித உரிமை காப்பாளர்கள் மீது இலங்கையில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைக்குழுவின் முன் சாட்சியமளி;ப்பவர்கள் தண்டிக்கப்படுவர் என்று கூறியுள்ளமையை குறித்த 6 மனித உரிமை அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தபோதும் இந்த அச்சுறுத்தல்களை அவரால் நேரடியாக உணரமுடிந்தது.

சிங்கள நாளிதழான திவயின குறித்த அரசசார்ப்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் நாட்டை காட்டிக்கொடுப்பதாக குற்றம் சுமத்தியிருந்தது.

எனவே தங்களுக்குள்ள கடமைகளின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவோர் அச்சுறுத்தலுக்கும் பழிதீர்க்கப்படுவதற்கும் எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் அந்த நாடு சிவில் மற்றும் அரசியல் ரீதியான உரிமைக்காப்பாளர்களை பாதுகாக்கும் கடமையை சட்டரீதியாக கொண்டுள்ளது.

இது அரசாங்கத்துக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. அரசாங்க சார்ப்பற்றவர்களுக்கும் பொருந்தும்.

எனவே ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவோருக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் பழிதீர்த்தல்கள் என்பவற்றுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று 6 சர்வதேச அமைப்புக்களும் தமது கடிதத்தில் கோரியுள்ளன.

TAGS: