வடக்கில் தொடரும் நிலப்பறிப்பு, இராணுவ பிரசன்னம் – மோடியிடம் முறைப்பாடு

tna-modi-03இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு இந்தியா உதவியளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் 115 முகாம்களில் உள்ளனர்.

இந்தநிலையில் குறித்த அகதிகளின் நிலங்கள் இலங்கை இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமையால் அவற்றை விடுவிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை, இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தக்கோரிக்கையை அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின்போது முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அகதிகள், இலங்கை திரும்பினால் அவர்கள் தமது சொந்த இடங்களில் குடியமர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக மாவை கூறினார்.

நிலப்பறிப்பு, இராணுவ பிரசன்னம் மற்றும் வடக்கில் அதிக இராணுவ பிரசன்னம் காரணமாக பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் மோடியின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக சேனாதிராஜா குறிப்பிட்டார்.

இந்திய பிரதமருடன் அரை மணித்தியால பேச்சுவார்த்தைக்கே நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதும் அது ஒரு மணித்தியாலம் வரை நீடித்ததாக அவர் கூறினார்

இதேவேளை இந்த சந்திப்பின்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம் சமூகம் மற்றும் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி சமூகம் என்பவற்றுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று மோடி இதன்போது தமக்கு அறிவுரை கூறியதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

TAGS: