இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுக்கப்படும்போடு அதில் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் மற்றும் எண்ணங்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியத் தரப்பு தெரிவித்ததாக, மாவை சேனாதிராஜா அவர்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதேவேளை மலையகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும், சிவில் அமைப்பினரும், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமது தரப்புக் கருத்துக்களை இந்தியத் தரப்பின் பல்மட்டங்களில் எடுத்துக் கூறியுள்ளனர்.
இருநூற்று ஆண்டு காலமாக இந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களாக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்ட, இந்திய மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்று அவர்கள் இந்தியத் தரப்பிடம் கூறியுள்ளனர்.
தொடரும் பேச்சுவார்த்தைகள்
எனவே இனப்பிரச்சினைக்கான நிரந்திர அரசியல் தீர்வு குறித்து பேசப்படும்போது, அதில் இந்திய வம்சாவளித் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமது தரப்பு, இந்தியாவிடம் கூறியதன் வெளிப்பாடே, கூட்டமைப்பிடம் இந்தியா தெரிவித்தக் கருத்துக்கள் என்கிறார் மலையகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும்,சமூக ஆர்வலருமான மூ. சிவலிங்கம்.
சில மாதங்களுக்கு முன்னர் அவ்வகையில் இந்தியத் தரப்புடன் தங்கள் குழுவினர் பேச்சுவார்த்தைகளை நடத்தினர் எனறும் பிபிசி தமிழோசையிடம் கூறினார் மூ. சிவலிங்கம்.
எனினும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதால், அது தொடர்பிலான விபரங்களை ஊடகங்களுக்கு இப்போது தெரிவிக்க இயலாது எனவும் அவர் கூறினார். -BBC