தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்துவதனை இந்தியா நிறுத்தவேண்டும்!

modi_sampanthan_met_001தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை திருப்திப்படுத்துவதனை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா திருப்திப்படுத்த வேண்டியதில்லை.

1987ம் ஆண்டு இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இந்தியா பின்பற்றுகின்றதா? ஒப்பந்தம் தொடர்பிலான இந்தியாவின் பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? ஒப்பந்தத்தின் 2.16 என்ற சரத்து முழுமையாக மீறப்பட்டுள்ளது.

இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியுள்ளனர்.

13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுப்பதற்கு முன்னதாக, இலங்கையுடனான ஒப்பந்தத்தின் தமது பக்க கடப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதனை இந்தியா ஆராய வேண்டும்.

13ம் திருத்தச் சட்டத்தை ஏதேனும் ஆயுத குழுவொன்று ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா உறுதியளித்திருந்தது. எனினும் இந்த உறுதிமொழிக்கு அமைய இந்தியா செயற்படவில்லை.

இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இந்தியாவை பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என இந்தியா அறிவித்திருந்தது.

இலங்கையில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர், இதன் அடிப்படையிலான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனியொரு இன சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் தொடர்பு பேணுவதில் பயனில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனியான ஓர் நிகழ்ச்சி நிரலை கொண்டு இயங்கி வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் குரல் என்பது இரகசியமானதல்ல.

இவ்வாறான ஓர் நிலையில் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது தொடர்பில் இனவாத பிரதேச அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.

மாறாக இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

TAGS: