பிரதமராகப் பதவியேற்று மூன்று மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நேரம் ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதுகிறது இலங்கை அரசு.
பதவியேற்ற புதிதில் சார்க் மாநாட்டுத் தலைவர்களோடு பத்தோடு பதினொன்றாக ராஜபக்சவையும் அழைத்து அனுப்பி வைத்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கோ டெல்லியில் தனி மரியாதை. வெளியுறத் துறை அமைச்சர், அதிகாரிகள், பிரதமர் எனச் சந்திப்பை முடித்து சென்னை வந்திருக்கும் கூட்டமைப்பின் பிரமுகரும் எம்.பி-யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு,
டெல்லி சந்திப்பு பற்றி சொல்லுங்கள்?
எங்கள் கூட்டமைப்பின் மூத்த தலைவர் சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா உட்பட ஆறு பேர் டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங்கையும், பின்னர் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் சந்தித்துப் பேசினோம்.
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நடந்த முதல் சந்திப்பு என்ற வகையிலும், அரசியல்ரீதியாக மிக முக்கியமான காலகட்டத்தில் நடந்த சந்திப்பு என்ற வகையிலும் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் பிரதமரிடமும் உங்கள் முறைப்பாடு என்ன?
இலங்கை இராணுவத்தில் இப்போது மொத்தம் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். இதில் ஒன்றரை லட்சம் பேர் வடக்கில் நிலைகொண்டிருக்கிறார்கள். இந்த இராணுவம் ஏதோ வடக்கில் பாதுகாப்புப் பணியில் மட்டும் ஈடுபடுவதாக இலங்கை அரசு சொல்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல.
வட பகுதி தமிழ் பெண்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள். குழந்தைகளையும்கூட இராணுவத்தினரின் பாலியல் சீண்டல் விடவில்லை. பாதுகாப்பு என்பதைத் தாண்டி, இராணுவக் குடியிருப்புகளை இலங்கை அரசு வட பகுதியில் ஏற்படுத்துகிறது.
நிரந்தரமான இராணுவக் குடியேற்றங்களை ஏற்படுத்துவன் மூலம், இராணுவத்தினரை வடக்கின் குடிமக்களாக மாற்றுகிறது இலங்கை அரசு. போருக்குப் பின்னர் நிலங்களை, வீடு வாசல்களை, உறவுகளை இழந்த மக்களுக்கு, உரிமைகளையும் வாழ்வதற்கான நம்பிக்கைகளையும் வழங்க வேண்டும் என்று அங்குள்ள நிலைமைகளை விளக்கிக் கூறினோம்.
ஈழ மக்களுக்கு அரசியல் தீர்வாக நீங்கள் கேட்டது என்ன? அவர்கள் சொன்னது என்ன?
இந்தியாவால் உருவாக்கப்பட்ட 13-வது சட்டத் திருத்தம் என்பதை நாங்கள் முழுமையான அரசியல் தீர்வாகக் கருதவில்லை. ஆனாலும், அந்த சட்டத் திருத்தம் வழங்கிய உரிமைகளைக்கூட வழங்க இலங்கை தயாராக இல்லை. வடக்கையும் கிழக்கையும் இரண்டாகப் பிரித்தது, 13-வது சட்டத் திருத்தத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்பதைக் கூறினோம்.
ஆனாலும், இன்றைய நிலையில் 13-வது சட்டத் திருத்தத்தை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. ஏனென்றால், இதே நிலை நீடித்தால் இன்னும் 10 வருடங்கள் கழித்து இலங்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வருவார்கள். ஆகவே, எங்களுக்கு இந்தியாவின் தலையீடு அவசியமான ஒன்றாக ஆகிறது.
கடந்த கால காங்கிரஸ் ஆட்சி அணுகுமுறைக்கும் பா.ஜ.க ஆட்சியின் அணுகுமுறைக்கும் வேறுபாடு உள்ளதா?
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கடைப்பிடித்த அதே மென்மையான போக்குதான் இன்றைய பா.ஜ.க ஆட்சியிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.
இலங்கை ஆட்சியாளர்கள் கடந்த காங்கிரஸ் அரசுக்கு என்ன பதிலைச் சொன்னார்களோ, அதே பதிலைத்தான் இன்றைய ஆட்சியாளர்களும் சொல்கிறார்கள். எங்கள் கோரிக்கையே, இந்த அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பதுதான்.
ராஜபக்சவுக்கு நெருக்கமான சுப்பிரமணியன் சுவாமியை இலங்கைக்கு அனுப்பி நட்பு வளர்க்கிறதே பா.ஜ.க?
இல்லை. அது தனிப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி என்பவரின் பயணம். அவருக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க ஆட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுப்பிரமணியன் சுவாமியின் நடவடிக்கைகளை இந்திய அரசின் நடவடிக்கையான அவர்களும் சொல்லவில்லை. நாங்களும் அப்படி பார்க்கவில்லை.
ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அவரைச் சந்திக்க முயலவில்லையா நீங்கள்?
எங்கள் மக்களுக்காக தமிழக முதல்வர் தீர்மானம் போட்டபோது மகிழ்ந்தோம். அவரைச் சந்திக்க நேரம் கேட்டோம். இந்த நிமிடம் வரை தமிழக முதல்வரின் அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்.
இந்த விசயத்தில் மக்கள் திலகம் புரட்சி தலைவர் எங்கே ஜெயா
எங்கே.ஒரு கடமைக்கு கூடவா பார்க்க நேரமில்லை.அரசியல் காரனை நம்பாதிங்க சம்பந்தன் மறுபடியும் …..
என்னதான் அவ்வளவு பிடுங்குவதற்கு நிறைய வேலைகள் இருந்தாலும் இந்தக் கூத்தாடி அம்மா இவ்ர்களை மதித்து, இவர்களின் வயதை மதித்து, முதிர்ச்சியை மதித்து, தினம்2 ஈழத்தில் இவர்கள் மக்கள் கடக்கும் நரக வேதனையை உணர்ந்து, அவர்களை விமான நிலையத்தில் இருந்து நேர தன்னைக் காண வாகனம் அனுப்பி வைத்திருக்க வேண்டும். தமிழனை மேலே வரமுடியாமல் செய்ய இன்னும் எத்தனை டாஸ்மாக்களைத் தமிழர் நாட்டில் திறக்கலாம் என்று கட்சி மாவட்டத் தலைவர்களுடன் மிக அதிமுக்கிய ஆலோசனையில் இருந்திருப்பார். அந்தத் தலைவர்கள் அத்தனை பேரும், ஒருவர் தவறாமல், பாதி கூன் விழுந்த நிலையில், தாங்கள் மானமுள்ள ஆண்கள் எனதை மறந்து, அடக்கமுடன் அடிமைபோல் கைகட்டி அம்மா முன் அரை வட்டத்தில் நிற்க, இந்தக் கூத்தாடி அம்மா மட்டும் ஓர் அரசருக்கு உரிய இருக்கையில் அமர்ந்து சம்பாசனை……! சிலருக்கு கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அது அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்பதனை மறந்து அது அவரின் தலைக்குள் சென்று அங்கேயே நிரந்தரமாகிவிடுகிறது. அதனால் இவர்களுக்கு தலைகணம்மிகுதி நோய் உண்டாகிறது. இவர் சிறிதும் இடைவெளி இல்லா நெருக்கமுடனிருந்த மக்கள்திலகம் கொண்ட அடக்கமிகு பண்பினை இவர் ஏனோ பெறத்தவறிவிட்டார். அவரிடம் இருந்து அதிகாரத்தை சூழ்ச்சியுடன் பெற்றவர் அவரின் அடக்கத்தைப் பெற விரும்பவில்லை.