தமிழர்கள் சுயமரியாதையுடன் நியாயபூர்வமான அபிலாஷைகளைப் பெற்று கௌரவமாக வாழ்வதற்குரிய இலக்கை அடைவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இந்தியப் பயணம் திருப்திகரமான ஆரம்பமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிலிருந்து நேற்றைய தினம் நாடு திரும்பிய இரா.சம்பந்தன் இந்தியாவுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ விஜயம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
இந்தியாவின் மத்தியில் புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததும் அவர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் மக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எமது விருப்பத்தை வெளியிட்டிருந்தோம்.
அதன் பிரகாரம் புதிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாம் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு சென்றிருந்தோம்.
அங்கு நாம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளிவிவகார செயலாளர், உதவி வெளிவிவகார செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங், ஆகியோருடன் தனித்தனியாக விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திதிருந்தோம்.
யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் தமிழ்ர்கள் பல்வேறு நெருக்கடி நிலைமைகளை அன்றாடம் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் கையகப்படுத்தும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மீள்குடியேற்றப்படாத நிலையில் மக்கள் இன்னமும் இருக்கின்றார்கள். உயர்பாதுகாப்பு வலங்கள் அகற்றப்படாதிருப்பதுடன் இராணுவ பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலைகளுக்குள் வாழும் தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடவில்லை என்பதை எடுத்துக் கூறி அவை தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராய்திருந்தோம்.
அதன் பின்னர் எமது விஜயத்தின் நீட்சியாக தமிழ்நாட்டிற்கும் சென்றிருந்தோம். அங்கு பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், செயலாளர் வானதி சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட 12முக்கியஸ்தர்களுடன் விசேட சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருந்ததுடன் மேற்கண்ட விடயங்கள் தொடர்பாக தெளிவாக ஆராய்ந்து அவர்களின் நிலைப்பாடுகளையும் அறிந்துகொண்டோம்.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எமது இந்திய விஜயமானது திருப்திகரமான ஆரம்பமாக அமைந்துள்ளது. அத்துடன் தமிழர்கள் கௌரவமாக சுயமரியாதையுடன் நியாயபூர்வமான அபிலாஷைகளை பெறும் இலக்கை அடைவதற்கு இந்தியா தொடர்ந்தும் உறுதுணையாக இருப்பதோடு அதற்காக தம்மாலான நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் நிலைப்பாடு அவ்வாறிருக்கின்ற நிலையில் தொடர்ச்சியாக நாம் பக்குவமாகச் செயற்பட்டு அந்தக் கருமங்கள் வெற்றியடைவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார்.