காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் விடுதலை, போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வு, அனைத்து இயக்கங்களினதும் போராளிகளுக்கான வாழ்வாதாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார்.
பாராளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்ட மேற்குறித்த விடயங்களை மிகுந்த அவதானத்துடன் செவிமடுத்த உயர்ஸ்தானிகர், தன்னால் இயன்றவரை குறித்த விடயங்களை முதன்மைபடுத்தி ஆவன செய்வதாக தெரிவித்தார்.
இந்தச்சந்திப்பில் உயர்ஸ்தானிகருடன் அவருடைய உதவியாளர்களும், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு வெலிஓயா, மன்னார் முசலி, கொக்கச்சான்குளம் எனும் கலாபோவஸ்வௌ, செட்டிக்குளம், ஓமந்தை இறம்பைக்குளம் உள்ளிட்ட வன்னி மாவட்டத்தின் ஏனைய பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்கள குடியேற்றம், நில அபகரிப்பு, பௌத்த மயமாக்கல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் சிவசக்தி ஆனந்தன் விரிவாக எடுத்துரைத்தார்.
இதன்போது சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடுகள், இராணுவம், பொலிஸ் ஆகியவற்றின் மக்களுடனான அணுகுமுறைகள், காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை பாதுகாப்பு தரப்பினரும், புலனாய்வு பிரிவினரும் தொடர்ச்சியாக மிரட்டி வருதல் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுதல் குறித்தும், முன்னாள் போராளிகளையும், தமிழ் மக்களையும் தொடர்ந்தும் மனஉளைச்சலுக்கு ஆட்படுத்தி வரும் அரசின் செயல்பாடுகள் குறித்தும், போரினால் விதவைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களின் நிரந்தர வாழ்வாதாரம் குறித்தும், போரால் முழுமையாகப்பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை பற்றியும், பாராளுமன்ற உறுப்பினராலும் மாகாணசபை உறுப்பினராலும் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்ட போது, அவர் அதுகுறித்து தானும் அறிந்திருப்பதாக கூறினார்.
மேலும் பாதுகாப்பு தரப்பினர் தொடர்பாக தெரிவித்த விடயங்களை உரிய பாதுகாப்பு தரப்பினரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் இன்னமும் மீள்குடியேற்றப்படாத மக்கள் இருக்கிறார்களா? அவ்வாறு இருந்தால் அவர்கள் எங்கிருக்கிறார்கள்? என்று
உயர்ஸ்தானிகர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சிவசக்தி ஆனந்தன், வவுனியா பூந்தோட்டத்திலும் சிதம்பரபுரத்திலும் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருபது வருடங்களுக்கும் மேலாக மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.