மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.
தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான விசாரணையோன்றுக்கு முகம் கொடுக்க நான் தயங்க மாட்டேனென்று கூறிய அவர், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று நிருபிக்க தான் தயாரென்றும் தெரிவித்தார்.
எனவே சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறியுள்ள கருத்தை தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயக்கம் காட்டி வருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சரத் பொன்சேகா, குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் மாத்திரமே இவ்வாறு தயக்கம் கட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் கருத்துக்களை தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் தான் அதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது சாட்சியங்களை வழங்கும் நபர்கள் அதற்கான பிரதிபலன்களை முகம் கொடுக்க நேரிடுமென அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூட அண்மையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.
ஆயினும் இராணுவம் எந்த விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று கூறிய சரத் பொன்சேகா அதனை நிருபிப்பதற்காக தான் எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்க தயாரென்றும் தெரிவித்தார். -BBC