இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் வடகிழக்கு மாகாணம் அமைந்து, இந்திய அமைதிப்படை உதவியுடன் தேர்தல் நடத்தப்பட்ட வேளையில், பல்வேறு போராட்ட அமைப்புகள் அரசியல் அமைப்புகளாக தேர்தலைச் சந்தித்தன. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் புறக்கணித்த தேர்தலில் ஏனைய போராளிக் குழுக்களும், அரசியல் அமைப்புகளும் கலந்து கொண்டன. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக 1988, டிசம்பர் 10 முதல் சுமார் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தவர் ஈபிஆர்எல்எப் அமைப்பைச் சேர்ந்த வரதராஜ பெருமாள். ஆட்சிக் கலைப்புக்குப் பிறகு, விடுதலைப் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று பயந்து கடந்த கால்நூற்றாண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் அவர், இரு நாள்களுக்கு முன்பு கோவை, ஈரோடு வந்திருந்து தனது நண்பர்களைச் சந்தித்துச் சென்றார்.
வரதராஜ பெருமாளுடன் செய்தி ஆசிரியர் இரா. சோமசுந்தரம் தொலைபேசியில் உரையாடியது:
வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் என்ற முறையில், இன்று இலங்கை வடகிழக்கு மாகாணத்தில் தமிழருக்கான அரசு அமைந்துள்ள சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்…
யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. யுத்தம் இல்லாத சூழல் நல்லதாக இருக்கிறது. இதில் சந்தேகம் இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக உயிர் இழப்பும், உடைமை இழப்புக்கும் ஆளாகி, இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்த நிலைமை இன்று இல்லை. இன்று உயிருக்கும் உடைமைக்கும் அழிவு இல்லை. அழிந்துபோன பலவும் மீளக் கட்டப்படுகின்றன. இதற்குப் பல்வேறு நாடுகள் உதவி செய்கின்றன. குறிப்பாக, இந்திய அரசின் முயற்சியால் இலங்கைத் தமிழர்களுக்கு நன்மையானவை நடந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும், மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்கின்றபடியாக, இலங்கைத் தமிழர்களிடம் அச்சம் நீங்காத நிலைமை உள்ளது. தமிழர் பகுதியில் இலங்கை ராணுவத்தின் செல்வாக்கு இருக்கிறது. அவர்களது அதிகமான நடமாட்டத்தால் மக்களிடம் அச்சம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டணி அரசு அமைந்திருந்தாலும்கூட, மாகாண அரசு சுதந்திரமாகச் செயல்படுவதாக சொல்வதற்கில்லை. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டணியிலும் பிழை இருக்கிறது. இலங்கை அரசின் நடவடிக்கையிலும் பிழை இருக்கிறது. இதில் நான் இலங்கை அரசையே குற்றம் சொல்வேன்.
மோடி தலைமையிலான அரசு இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் என்ற எண்ணம் தொடக்கத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இப்போது, ஈழத் தமிழர் பிரச்னையில் பாஜக இரட்டை வேடம் என்று தமிழர் ஆதரவு அமைப்புகள் குறை சொல்கின்றன. இப்பிரச்னையில் இந்திய அரசு எதைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்?
இந்திய அரசு குறித்து ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அபிப்ராயம் சொல்லலாம். கடந்த 30 ஆண்டுகளாக, காங்கிரஸ் ஆட்சி என்றாலும், பாஜக ஆட்சி என்றாலும், ஆள்பவர்கள் மாறினாலும் இந்திய அரசு என்பது ஒன்றுதான். இந்திய அரசின் கொள்கை, நிலைப்பாடு எல்லாமும் இலங்கைத் தமிழர்களின் சமாதானம், சமரசம், வாழ்வாதாரம் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு கட்சிக்கும் முரண்பாடுகள் இருப்பதிலும் ஆச்சரியமில்லை.
2009 இறுதிப் போருக்குப் பிறகு, இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் புனர்வாழ்வுக்கும், அவர்களது தொழில் மேம்பாட்டுக்கும் உதவி செய்வதும், அவர்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பிப்போய் வாழ்வதற்கான வீடுகள் கட்டிக் கொடுக்கவும், பள்ளி, மருத்துவமனை அமைக்கவுமான செயல்களை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்தது. அவை உடனடியாகச் செய்யப்பட வேண்டியவை. அடுத்த கட்டமாக அரசியல் அதிகாரம் பெறும் நடவடிக்கை எடுக்க வேண்டிய வேளையில் மோடி அரசு பொறுப்பேற்றுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
13ஆவது திருத்தச் சட்டத்தின்படி அதிகாரப் பகிர்வை, இலங்கை அரசு தமிழர்களுக்கு வழங்கும் என்று நம்புகிறீர்களா?
அதிகாரப் பகிர்வை ராஜபட்ச ஏற்றுக் கொண்டாக வேண்டும். இலங்கை அதிபராக ராஜபட்ச அரசியல் சாசனம் மீது சத்தியம் செய்து உறுதி ஏற்கும்போது, இந்த அரசியல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றுதான் உறுதி எடுத்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி அவர் அளிக்க மறுத்தால், அவரே இலங்கையின் அரசியல் சாசனத்தை மீறிய முதல் குடிமகன் ஆவார். அரசியல் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவது ராஜபட்சவின் கடமை. சத்திய பிரமாணத்தை அவர் மீற முடியாது. அதிகாரப் பகிர்வு மட்டும்தான் இலங்கைப் பிரச்னைக்கு அடிப்படைத் தீர்வாக இருக்கும்.
இலங்கைப் பிரச்னையில், தமிழக அரசியல் கட்சிகள், தமிழர் ஆதரவு அமைப்புகள் பலவும் வெவ்வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை தருகின்றன. இதனால், இலங்கைப் பிரச்னையில் தமிழர்கள் வேறுபட்டு நிற்கும் சூழல் இருக்கிறது. இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழர் ஆதரவு அமைப்புகள் எல்லாரும் இலங்கைத் தமிழர் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள். இதில் சந்தேகமே இல்லை. இலங்கைத் தமிழருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று அக்கறையோடு இருக்கிறார்கள். அவர் எந்த அணியில் இருக்கிறார்கள், எந்தப் பிரச்னையை மட்டும் பேசுகிறார்கள் என்பது அந்தக் கட்சிகள், தலைவர்களின் விருப்பம். எப்படியாக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு நன்மைக்கு முன்னுரிமை தந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர் நன்மைக்கான முழுமையான வடிவமாக இருக்கும்.
அதிகாரப் பகிர்வு போன்ற அரசியல் தீர்வுகளுக்கு அப்பாற்பட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு புதுவாழ்வு அளித்தல், தொழில்வாய்ப்பை தருதல் போன்ற பணிகளில் தமிழக அரசும், இலங்கை வடகிழக்கு மாகாண அரசும் இணைந்து செயல்பட சாத்தியம் உள்ளதா!
இத்தகைய உதவிகளைச் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. தமிழக அரசு நேரடியாகச் செய்ய வேண்டும் என்றால், இந்திய அரசின் ஒப்புதலுடன் செய்ய முடியும். இலங்கையைப் பொருத்தவரை இதைச் செய்வது இந்தியா என்பதாகத்தான் இருக்கும்.
தமிழக மீனவர் பிரச்னையில், இலங்கை ராணுவம் மீனவர்களை சிறை பிடிக்கக்கூடாது. படகுகளை வேண்டுமானால் பறிமுதல் செய்யட்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ள கருத்து பற்றி…
மீனவர்களை சிறை பிடிக்கக்கூடாது என்ற கருத்தை ஏற்றுக்கொள்வோம். படகுகளை பறிமுதல் செய்யக்கூடாது என்ற கருத்தை மற்ற கட்சிகள் வலியுறுத்தட்டும்.
பாக் நீரிணைப் பகுதியில் யாழ்ப்பாண மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் மீன்பிடி உரிமை உள்ளது. 1974-ம் ஆண்டு ஒப்பந்தப்படி இந்த உரிமை இருக்கிறது. இப்போது அப்பகுதியில் மீன்வளம் குன்றியதுதான் இரு தரப்பினருக்கும் வாழ்வாதார பிரச்னையாக இருக்கிறது. மீன்வளம் குறையாமல் இருக்க மீன்பிடி முறைமை மாற வேண்டும். நீண்டகாலத் தீர்வு இதுவாகத்தான் இருக்கும். இல்லையானால், கடல் வளம் பாதிப்படைந்து இரு தரப்பினருக்கும் மீன் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிடும்.
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது குறித்து, அண்மையில் ஒரு முகாமில் சந்திரகாசன் பேச முயன்றபோது எதிர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் திரும்பிச்செல்ல விரும்பவில்லை. ஏன்?
இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் இரண்டு உறுதிகள் தேவை. பாதுகாப்பு. தன் வாழ்வை மீண்டும் தொடங்குவதற்கான வாழ்வாதாரம். இந்த இரண்டும் உறுதி செய்யப்படுமானால் திரும்பிச் செல்வார்கள். இந்த உறுதியை தனிநபரோ அல்லது சமூகத் தொண்டு நிறுவனமோ அளித்துவிட முடியாது. அரசு மட்டுமே செய்ய முடியும்.
தமிழர் – சிங்களர் பிரச்னைக்குப் பிறகு தற்போது இலங்கைச் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் – சிங்களவர் பிரச்னை தோன்றியிருக்கிறதே…
கடந்த 30 ஆண்டு போராட்டத்தில் இலங்கையின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டது. தற்போது இந்தப் பிரச்னை வளருமேயானால், அடுத்த 30 ஆண்டுகளில் இலங்கையே அழிந்துவிடும்.
நீங்கள் இலங்கை செல்வது எப்போது?
2010, 11, 13-ஆம் ஆண்டுகளில் நான் இலங்கை சென்று அரசியல் நடத்தும் வாய்ப்புகளைக் காண முயன்றேன். கடந்த 25 ஆண்டுகளில் நான் இந்தியாவில் வாழ்ந்ததில் எனது ஒரு மகள் ராஜஸ்தானிலும், ஒரு மகள் லக்னெüவிலும் மணமுடித்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் ஓர் அணில் போல என்னால் முடிந்ததை இலங்கை மக்களுக்கு இந்தியாவில் இருந்துகொண்டே செய்ய விரும்புகிறேன்.