ஐக்கிய நாடுகள் சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகளில் பங்கேற்போர் தொடர்பில், நடவடிக்கை எடுக்கும் முன்னர் அது தொடர்பான நிலைமைகள் ஆராயப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்ப்பார்ப்பின் அடிப்படையில் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.
எனினும் சர்வதேச விசாரணைகளுக்கு சாட்சியமளிப்போர் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு என்ன நடைமுறையை பின்பற்றுவது தொடர்பாக ஆராய வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைக்கு செல்வோரை தடுப்பது குறித்து நிலைமைகளை பொறுத்து தேவையேற்பட்டால் ஆராயப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் குறித்த சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையிலேயே அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு வெளியாகியுள்ளது.