யாழ்ப்பாணத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் இரகசிய காரியாலயமொன்று இயங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், வடக்கு மக்களின் சாட்சியங்களை திரட்டும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இவ்வாறு இரகசிய காரியாலயமொன்று அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் இரகசியமான முறையில் இந்த இணைப்புக் காரியாலயம் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் இறுதிக்கட்ட போரின் போதும் அதற்கு முன்னரும் மக்கள் எதிர்நோக்கிய அவலங்கள் தொடா்பில் சாட்சியங்கள் திரட்டப்பட உள்ளன.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் வடக்கு மக்களிடம் தகவல்களை திரட்டி அவற்றை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் இலங்கை இணைப்பாளராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டு வருகின்றார்.
சாட்சியாளர்கள் யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெரு இலக்கம் 43 என்னும் இடத்தில் அமைந்துள்ள இணைப்புக் காரியாலயத்தில் சாட்சியமளிக்க முடியும்.
தமிழ் அல்லது ஆங்கில மொழியில் சத்தியக் கடதாசிகளை சமர்ப்பிப்பதன் மூலம் இவ்வாறு சாட்சியங்களை வழங்க முடியும்.
சாட்சியமளிக்கத் தேவையான சத்தியக்கடதாசியின் மாதிரிகளை யாழ்ப்பாண காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என சிங்களப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.