விடுதலைப் புலிகளின் கொள்கையை வெளிப்படுத்தும் கூட்டமைப்புடன் தனிப்பட அரசாங்கம் பேசாது!

nimal_de_silva001தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமாதானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை. ஜனநாயகத்தை நேசிக்கும் தற்போதைய அரசாங்கம் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது.

போலியான வாதங்களை முன்வைக்காது வடக்கு கிழக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் அங்கம் வகிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமை ஒரு புறத்தில் ஜனநாயக கொள்கைளையும் மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளையும் வெளிப்படுத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு மீண்டுமொருமுறை கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுகின்றேன் என நிமால் சிறிபால டி சில்வா கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடாத்த சந்தர்ப்பம் வழங்கப்படாவிட்டால் போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாகவும் அது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன எனவும் செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

TAGS: