சம்பந்தனின் நிபந்தனைகளுடன் இணங்க முடியாது – திஸ்ஸ விதாரண

thissa vitharanaதமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனினால் விடுக்கப்பட்ட நிபந்தனைகளுடன் இணங்க முடியாது என சிரேஷ்ட அமைச்சரும், சர்வ கட்சி குழுவின் முன்னாள் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது;

“தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த மட்டத்திலும் கலந்துரையாடல்களை நடத்தினால், அது சிறந்ததாகும். இதனை முன்னோக்கி கொண்டு செல்லவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது. இதனை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் பங்காளி கட்சி என்ற ரீதியில் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

உதவிகளை வழங்குமாறு தென்னாபிரிக்காவிற்கு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிபந்தனைகள் இன்றி கலந்துரையாடல்களை நடத்துவது என்றால், அது சிறந்ததாக அமையும். அது குறித்து எந்தவித பிரச்சினையும் கிடையாது. நாட்டின் அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அல்ல என்பதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே நாட்டின் அரசாங்கம். சிறுபான்மை என்ற விதத்தில், பெரும்பான்மையினருக்கு, அவர்களினால் நிபந்தனைகளை விடுக்க முடியாது. நிபந்தனைகள் இன்றி கலந்துரையாடல்களை அவர்கள் நடத்த முன்வர வேண்டும்.

கால வரையரை குறித்து அவர்களுக்கு நிபந்தனைகளை விடுக்க முடியாது. கலந்துரையாடல்களின் போது எழுகின்ற பிரச்சினைகள் என்னவென்பது குறித்து அவர்கள் பார்க்க வேண்டும். அவை குறித்து கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். சர்வதேச தலையீடுகள் குறித்த முடிவுகளை நாட்டின் அரசாங்கமே எடுக்க வேண்டும்.

எமது நாட்டின் அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை என்றால், அதனை செய்ய முடியாது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கவில்லை. அவர்கள் வரமாட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது என்பதற்காக அவர்களினால் வர முடியுமா? “

TAGS: