த.தே.கூட்டமைப்பினருடன் பேசத் தயார்! அவர்கள் இணங்கவில்லை: மஹிந்த ராஜபக்ச

mahinda-sampanthanதாம் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்நோக்கும் நிலையில், உள்நாட்டில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு அழுத்தத்தையும் எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக த ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கத்துக்காக அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 35 பரிந்துரைகளை ஏற்கனவே இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டார்.

இந்தநிலையில் காணி மற்றும் மீதமுள்ள பரிந்துரைகளை ஒரே இரவில் செய்யமுடிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையின் போரின்போது ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதை ஜெனீவாவில் உள்ள இலங்கையின் பிரதிநிதி ஏற்றுக்கொண்டுள்ளமையை சுட்டிக்காட்டியபோது, அதற்காக ஏற்கனவே ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதில் 20ஆயிரம் முறைப்பாடுகள் வரை விசாரணை செய்யப்படுகின்றன.

அதிலும் இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவற்றுக்கு விடுதலைப்புலிகளே காரணமாகும் என்றும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம், போரில் வெற்றி பெற்றபோதும் ஐந்து வருடங்களுக்கு பின்னரும் சமாதானத்தில் வெற்றி பெறவில்லை என்று குற்றச்சாட்டு குறித்து கருத்துரைத்த ஜனாதிபதி, பழைய அரசியல்வாதிகளின் மனங்களை மாற்றுவது கடினமானது என்று குறிப்பிட்டார்.

குறித்த அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகளின் கொள்கைகளை பின்பற்றுகின்றபோதும் இன்றைய இளைய தலைமுறையினர் வித்தியாசமாக சிந்திக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் இலங்கை அரசாங்கத்தை பற்றி கூறிய முறைப்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், தாம் நியமித்த அதிகாரிகள் வடமாகாணசபையின் நிர்வாகத்தில் தலையிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அதனை தாம் நிராகரிப்பதாக குறிப்பிட்டார்.

அந்த அதிகாரிகளை வடமாகாண சபையின் வேண்டாம் என்று கூறுகின்ற போதும் அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்கின்றனர். இதன்போது தம்மால் எதனையும் செய்ய முடியாது என்று மஹிந்த ராஜபக்ச கூறினார்.

வடமாகாண சபையின் பிரதம செயலாளரை பொறுத்தவரையில் அவர் ஒரு சுயாதீனமான அதிகாரியாவார். அதுவும் 13வது அரசியலமைப்புக்குள்ளேயே அவரின் அதிகாரங்கள் வருகின்றன.

இந்தநிலையில் 13வது அரசியலமைப்பின்கீழ் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் குறித்து பேச தாம் தயார் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேசத்தயார் எனினும் அவர்கள் அதற்கு இணக்கம் வெளியிடவில்லை என்றும் மஹிந்த தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்தமை தொடர்பில் தாம் அதிருப்தியடையவில்லை. ஏனெனில் அது அவர்களின் ஜனநாயகமாகும்.

போர் முடிந்த பின்னர் இராணுவத்தினரை வடக்கு கிழக்கில் இருந்து ஏனைய இடங்களுக்கு நகர்ந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி அங்கிருந்து 90வீதமான இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர்.

எனினும் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றமுடியாத நிலை உள்ளது. இந்தநிலையில் அவர்களை இந்தியாவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ மாற்றலாமா? என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பினார்.

இலங்கையை பொறுத்தவரையில் எவரும் எங்கும் வாழலாம் இந்தநிலையில் தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்ற செய்திகளில் உண்மையில்லை.

இந்திய அரசாங்கத்துடன் நல்லுறவை கொண்டுள்ள நிலையில் தமிழக முதல்வரும் பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் முடியவில்லை அதற்காக என்ன செய்யமுடியும்? எப்போதும் தாம் அவருடன் சமாதானத்துக்கு செல்ல வெள்ளைக்கொடியை உயர்த்திக்கொண்டிருப்பதாக மஹிந்த கூறினார்.

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் வெளியக சச்திகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது. இதன்காரணமாகவே ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழுவுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இன்று இலங்கையில் விசாரணையை மேற்கொள்ளக்கோரும் அவர்கள் நாளை காஸ்மீர் தொடர்பிலும் கோரிக்கையை விடுக்கலாம். எனவே அதற்கு இணங்கமுடியாது என்று மஹிந்த குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் பொது அமர்வின்போது தாம் இந்திய பிரதமரை சந்திக்க எண்ணம் கொண்டிருப்பதாகவும் மஹிந்த தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பொறுத்தவரையில் அவர் ஒரு பக்கசார்பாகவே நடந்து கொண்டார். இலங்கைக்கு வந்து நிலைமைகளை பார்வையிட்டபோதும் அவர் பக்கசார்ப்பற்ற போக்கையே கொண்டிருந்தார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அவரை இராணுவத்தினர் சுட்டுக்கொல்லவில்லை. போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே அது தொடர்பில் விசாரணை இடம்பெறுகிறது.

இதன்போது படையினர் மீது குற்றம் இருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

TAGS: