இனவழிப்பு என்னும் சொல்லை உச்சரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பயப்படுகின்றதா? சிவாஜிலிங்கம்

sivajilingamஇனவழிப்பு என்னும் சொல்லை உச்சரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு பயப்படுகின்றதா? என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வட மாகாண சபையின் விசேட அமர்வு நேற்று  காலை 9.30 மணியளவில் கைதடியில் உள்ள வட மாகாண சபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.

இவ் விசேட அமர்வில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் கடந்த அமர்வில் கொண்டுவரப்பட்டு ஒத்திவைக்கபப்ட்ட பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து சர்வதேச பொறிமுறையினை ஏற்படுத்த கோரி கொண்டுவரப்பட்ட சிவாஜிலிங்கத்தின் பிரேரணையின் விவாதத்தின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த பிரேரணையில் சில பாரதூரமான விடயம் உள்ளதனால் இதனை சபையில் முன்மொழிவதில் சில சிக்கல் உள்ளது எனவும் இப் பிரேரணை தொடர்பில் கட்சியின் 8 பேர் கொண்ட குழுவொன்று பரிசீலித்து வருவதாகவும் அதனால் இப் பிரேரணையை தற்காலிகமாக தள்ளி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு பதிலளித்த மாகான சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இப் பிரேரணையை முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க தள்ளிவைப்பதாக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இதில் பாரதூரமான விடயம் என சொல்லப்படுவது இனவழிப்பு என்னும் சொல் தான் அந்த சொல்லினை தமிழ் தேசிய கூட்டமைப்பு உச்சரிக்க பயப்படுகின்றதா என கேள்வி எழுப்புகின்றேன்.

அதேவேளை இலங்கையில் இனவழிப்பு நடைபெற்றது என்பதனை 1983ம் ஆண்டே அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் அமரர் அமிர்தலிங்கம், அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் தெரிவித்து இருந்தார்.

1983ம் ஆண்டு நடைபெற்றது இனக்கலவரம் அல்ல இனக்கலவரம் என்பது இரண்டு இனங்களுக்கு இடையிலான கலவரத்தையே குறிக்கும் ஆனால் 83ம் ஆண்டு நடைபெற்றது தனியே தமிழ் மக்கள் மீதான படுகொலையும் அவர்களின் உடமைகளை சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கையே எனவே அதுவும் ஒரு இனவழிப்பு தான் எனவே இனவழிப்பு எனும் சொல்லை உச்சரிப்பதற்கு பயப்பட தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: