நாங்கள் அமைதியாக இருந்தவாறு தீர்வை எதிர்பார்க்க முடியாது. தீர்வு தானாகவே வரும் என்ற மனப்பாங்கில் இருந்தால் எதுவும் இங்கு நடவாது. வெறுமனே போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. எமக்காக யாரும் போராட வரமாட்டார்கள். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகள் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்பட்டு வரும் நாங்கள் முதலில் போராட வேண்டும். அதன் பின்னர் தானாகவே சர்வதேச சக்திகளும், அதன் ஆதரவும் கூடி வருமென்று த.தே.கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் பதினைந்தாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
சிறிய வயசிலிருந்து ஓர் அடிமட்டத்தொண்டனாக பல்வேறுபட்ட போராட்டங்களிலும் முன்னின்று ஈடுபட்டு, சிறைச்சாலைகளில் தனது இளமைக்காலத்தை கழித்து, இன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மாவை.சேனாதிராசா அண்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
தமிழ் மக்களின் குடிசனப்பரம்பல் நிலை மாற்றப்பட்டு அவர்களின் தனித்துவ அடையாளங்களை இல்லாமல் செய்து கொண்டிருக்கின்ற ஒரு காலத்தில் தமிழ் மக்களினுடைய உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற எதார்த்தமான ஒரு சூழலில் தமிழரசுக்கட்சியின் மாநாடு நடைபெறுகின்றது. இந்நிலையில் எமது கடமைகள் பொறுப்புகள் சாதாரணமானவையல்ல.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நாம் நடத்தி முடித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாநாட்டில் பல்வேறுபட்ட தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தோம். மிக முக்கியமாக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் வலுவான ஐக்கியத்தை ஏற்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தோம். இன்று இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் அன்று எமது மாநாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்கள்.
அன்றும் இன்றும் எமது எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகவே இருக்கிறது. அதாவது அடக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் இந்த நாட்டில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். சுதந்திரமாக சமத்துவமாக தமது உரிமைகளுடன் எமது மக்கள் வாழுவதற்கு நாம் அனைவரும் கைகோர்த்து கொண்டு அவர்களை முன்கொண்டு செல்ல வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் உரிமைகள் சார்ந்த விடயங்களிலாவது நாம் அனைவரும் ஐக்கியப்பட்டு செயல்பட வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தும் பிரேரணையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் மட்டுமல்ல, மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும் நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். ஒன்றுபட்டு ஒரு குடையின் கீழ் நிற்கின்ற போது தான் காத்திரமான தீர்வுக்கு நாம் பங்களிப்பு செய்ய முடியும்.
யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் முழுமையடைந்துள்ள நிலையிலும், மீள்குடியேற்றத்தை முடிக்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். ஏன் முடியவில்லை? என்று கேட்டால், அந்தப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இராணுவம் அனுமதிக்கவில்லை. இராணுவம் வெளியேற மறுக்கின்றது என்று கூறுகின்றோம்.
இலங்கையில் இவை தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தான பிரச்சினைகளல்ல. ஏனைய இனங்களுக்கும் உரித்தான பிரச்சினைகளே. காணிகள் பறிக்கப்படுகின்றன. நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் உடைக்கப்படுகின்றன. ஆயிரம் ஆண்டு காலப்பழமை பெற்ற வழிபாட்டுத்தலங்கள், வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுகின்றன. இந்த அநீதிகளை எல்லாம் கை கட்டி நின்று வேடிக்கை பார்க்கப்போகின்றோமா? இல்லை ஒன்றுபட்டு குரல் எழுப்ப போகின்றோமா? எனவே எம் முன் உள்ள சவால்கள், எமது கடமைகள் பொறுப்புகள் சாதாரணமானவையல்ல.
எனக்கு முன்னர் இங்கு உரையாற்றியவர்கள் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை பற்றி பேசினார்கள்;. காலம் காலமாக வந்த அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டிருந்தால், எம்மால் எப்போதோ பலவற்றை சாதித்திருக்க முடியும். ஆனால் இந்த அரசாங்கங்களின் மீது வைத்திருந்த நம்பிக்கையை தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம் மக்களும் முழுவதுமாக இழந்திருக்கிறார்கள். ஒரு சிலவேளைகளில் முஸ்லிம் தலைவர்கள் கூட இந்த நம்பிக்கையை இழந்திருக்கலாம். அப்படி அவர்கள் இழக்காவிட்டாலும் ஆனால் மக்கள் இழந்திருக்கிறார்கள்.
தத்தமது உரிமைகளை பெற்றுக்கொண்டு தமிழர்கள் தமிழர்களாகவும், முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும், மொழி மதம் கலை பண்பாடு கலாசாரத்தை பாதுகாத்து வாழ வேண்டுமாக இருந்தால், நாங்கள் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது அவசியமாகும்.
நாங்கள் பிரிந்து நின்று செயல்படுவதற்கான காலம் அல்ல இக்காலம். கூட்டாக இணைந்து செயல்பட வேண்டிய காலம் இது. வெறுமனே போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறிக்கொண்டிருப்பதால் எவ்வித பயனும் இல்லை. வாழ்நாள் முழுக்கவும் இவ்வாறு கூறிக்கொண்டு இருந்து விட்டுப்போக முடியாது. எனவே இன்று இந்த மாநாட்டில் அதற்கான காலவரையறையை செய்திருக்கிறார்கள். தமிழ் தேசியக்கூட்டமைப்பு இது தொடர்பாக பேசி நிச்சயம் ஒரு முடிவை எடுக்கும்.
ஜனநாயக போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவு தேவை. புலம் பெயர் தமிழர்கள் இரவு பகலாக ஆதரவு திரட்டும் வேலைகளை செய்கிறார்கள். தமிழக மக்களும் கடுமையாக உழைக்கிறார்கள். எனவே இந்த வாய்ப்புகளை நாம் தவற விடக்கூடாது. நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பாக இங்கு அவர்களைப்போல அர்ப்பணிப்புடன் அதற்காக வேலை செய்ய வேண்டும்.