ஐ.நாவின் காணாமல் போதல் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க இலங்கை மறுப்பு

un-logo1காணாமல் போனோர் தொடர்பாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் முடியும் வரை, சுயமின்றி காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழு இலங்கைக்கு விஜயம் செய்வதை அரசாங்கம் ஏற்க மறுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் பேரவை அமர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிக்கும் நிலையில், அதில் தமது விஜயம் குறித்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் சுயமின்றி காணாமல் போதல் சம்பந்தமான குழு சமர்ப்பித்துள்ளது.

எனினும் இதனை ஏற்க மறுத்துள்ள இலங்கை அரசாங்கத் தரப்பு, தமது ஆணைக் குழுவின் பணிகளை முடிவடைந்த பின்னரே குறித்த குழுவை நாட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த ஐக்கிய நாடுகள் குழுவுடன் தொடர்ந்தும் தாம் இணைந்து செயற்பட தயார் என்று இலங்கையின் பிரதிநிதி மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழுவினரை சந்திக்கவுள்ளது ஜனாதிபதி ஆணைக்குழு

காணாமல் போதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு முதல்தடவையாக அந்த குழுவுக்கான ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரை சந்திக்கவுள்ளது.

இந்த வார இறுதியில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகமவின் தகவல்படி, சர்வதேச நிபுணரான சேர் டெஸ்மன்ட் டி சில்வாவின் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவையே தமது குழு சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த நிபுணர் குழுவினரை கிளிநொச்சியில் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள காணாமல் போனோர் தொடர்பான விசாரணை அமர்வில் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பரணகம தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த அமர்வில் அவர்கள் பங்கேற்பார்களா? என்ற தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பரணகம குறிப்பிட்டுள்ளார்.

TAGS: