ஐநா விசாரணைக்குழு தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவது உகந்ததல்ல! சுரேஷ் எம்.பி.

suresh-10ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணைக்குழு தமது விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் நிலையில், குறித்த விசாரணைக்குழு தொடர்பாக வடமாகாண சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவது சமகாலத்திற்கு உகந்ததல்ல. என நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும், ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்பத்தில் கூட்டமைப்பிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் இல்லை.

எனவே மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 25ம், 26ம், திகதிகளில் நடைபெறவுள்ள கட் சியின் உயர்மட்டக் குழுவில் பேசுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு செயற்பாட்டிலிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்கான சர்வதேச பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். என வலியுறுத்தி மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு பிரேரணையினை முன்மொழிந்திருந்தார்.

எனினும் இப் பிரேரணை நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருவது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாகாணசபை உறுப்பினர் கொண்டுவந்திருக்கும் பிரேரணை தவறான ஒரு பிரேரணை அல்ல. அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் இன அழிப்பு என்னும் விடயத்தில் எவ்விதமான மாறுபட்ட கருத்துக்களும் எமக்கில்லை. நாங்கள் அது தொடர்பில் நாடாளுமன்றில் கூட பேசியிருக்கின்றோம். சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள்.

எனவே மிக தெளிவாக கூறுகின்றோம். குறித்த பிரேரணையின் உள்ளடக்கத்தில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால் ஜ.நா சர்வதேச விசாரணைக்குழு தன்னுடைய விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் தமிழர் தாயகத்தில் நடைபெற்றது ஒரு இன அழிப்பு என நாங்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்புவது பொருத்தமற்றது.

அதாவது வடமாகாணசபை வடக்கு தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குப் பலத்தின் மூலம் தமிழ்தேசிய கூட்டமைப்பு வடக்கில் மாபெரும் வெற்றியை பெற்று உருவாக்கிய சபை. எனவே அதற்கு ஒரு அங்கீகாரம் சர்வதேச மட்டத்தில் இருக்கின்றது. அங்கிருந்து வெளிவரும் விடயங்கள் மிக பெறுமதியானவை, மக்களுடைய மன உணர்வுகளை பிரதிபிலிப்பவை என்னும் பார்வையும் இருக்கவே செய்கின்றது.

இந்நிலையில் ஒரு சிறப்புமிக்க சபையில் வெறும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி அனுப்புவதனால் நிச்சயமாக எவ்விதமான பயனும் இல்லை. அத்தோடு ஐ.நா விசாரணைக்குழு எடுத்திருக்கும் தீர்மானங்களிலும் மாற்றத்தை கொண்டுவர முடியாது.

எனவே மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டு வந்திருக்கும் பிரேரணை எப்பொழுது பெறுமதி மிக்கதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் மாறும் என்றால், குறித்த பிரேரணையினை சபையில் நிறைவேற்றுவதுடன், இங்கே நடைபெற்றது ஒரு இன அழிப்பு என்பதனை நிரூபிக்கும் வகையில் மிக முக்கியமான ஆவணங்களையும் நாங்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துடன் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும்.

எனவே அதற்கான ஏற்பாடுகள் மாகாணசபையிடம் இருக்கின்றதா? இருந்தால் நிறைவேற்றப்படும் தீர்மானமும், அனுப்பப்படும் ஆவணங்களும், வடக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுடைய நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புக்கள் அதிகளவில் இருக்கின்றது.

மறுபக்கம் இந்த விடயம் தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமைகள் சர்வதேச மட்டத்தில் ஒரு இராஜதந்திர நகர்வினை மேற்கொண்டு வருகின்றன. எனவே இவ்வாறான பிரேரணை தொடர்பில் அவர்களுடைய நிலைப்பாடும் என்ன? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் எதிர்வரும் 25ம், 26ம் திகதிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இந்த விடயம் தொடர்பாக நாங்கள் நிச்சயமாக பேசுவோம்.

மேலும் விடயம் தொடர்பாக அந்தக் கூட்டத்திலேயே ஆக்கபூர்வமான நடவடிக்கை ஒன்றிணையும் நாங்கள் எடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAGS: