தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகிகள் சந்திப்பிற்கு அனுமதி மறுப்பு

tamil rafugeesதமிழகத்தில் 112 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளின் நிர்வாகிகள் ஓரிடத்தில் சந்திப்பதற்கு கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுத்துள்ளதாக அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 1600 பேர், லெணாவிலக்கில் 1500 பேர் மற்றும் அழியா நிலையில் 800 பேர் என மொத்தம் 3900 பேர் உள்பட தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 112 முகாம்களில் 66491 பேர் வசித்து வருகின்றனர்.

தமிழத்தில் உள்ள முகாம் மக்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இங்குள்ள முகாம் மற்றும் இலங்கையில் உள்ள பிரச்சினை தொடர்பாக முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி அதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக அனைத்து முகாம் மக்களின் சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆனால், இதற்கு கியூ பிரிவு பொலிஸார் திடீரென அனுமதி மறுத்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லை முகாமைச் சேர்ந்த விழா ஏற்பாட்டாளர்கள் கூறியது, பல ஆண்டுகளாக தமிழகத்தில் சுதந்திரமின்றி முகாம்களில் தங்கியுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் நேரடியாகவும், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் எங்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.

அதில் சில தொண்டு நிறுவனங்கள் அவர்களுடைய பணிகளை சரிவர செய்வதில்லை. இது ஒருபுறமிருக்க தற்போது எங்களை முகாம்களில் இருக்கவிடாமல் இங்கிருந்து இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கையில் மறைமுகமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் விரக்தி அடைந்து வேறு நாடுகளுக்கு செல்ல முயன்ற தோப்புக்கொல்லை முகாமைச் சேர்ந்த 11 பேரின் நிலைமை என்ன ஆனதென்றே தெரியவில்லை. இதே நிலை தமிழகத்தில் உள்ள அனைத்து முகாம்களிலும் உள்ளன.

இலங்கையில் நாங்கள் வாழ்ந்த பகுதியில் அந்நாட்டு அரசு இராணுவத்தை குவித்து வைத்துள்ளதால் நாங்கள் அங்கு சென்று எப்படி வாழ முடியும்.

இதேபோல அனைத்து முகாம்களிலும் உள்ள பிரச்சினைகள், இலங்கையில் தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து முகாமை சேர்ந்த நிர்வாகிகள் ஓரிடத்தில் கூடி பேச திட்டமிட்டிருந்தோம்.

அதோடு, இலங்கையில் 13-வது சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இரட்டைக்குடியுரிமை வழங்க வேண்டும். அகதிகள் மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்க மாநில அரசு சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட10 அம்சக் கோரிக்கைகளை பேசி அதை அரசுக்கு தெரிவிக்கவே இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்.

இதற்காக புதுக்கோட்டை பல்நோக்கு சமூக சேவை மன்றத்தில் செப்.15-ம் திகதி திங்கள்கிழமை கூட்டத்தை நடத்த முன் பணமும் செலுத்திவிட்டோம். ஆனால், அன்றைய தினம் கூட்டம் நடத்த கியூ பிரிவு பொலிஸார் அனுமதி மறுத்து வருகின்றனர்.

தற்போது பல்நோக்கு சேவை மையத்தினரும் இங்கு நடத்தக்கூடாது என்று நாங்கள் செலுத்திய முன்பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு நிர்பந்தித்து வருகின்றனர்.

வேறு வழி இல்லாமல் அனுமதி கோரி சென்னையில் உள்ள இலங்கை அகதிகளின் ஆணையருக்கு மனு அனுப்பியுள்ளோம். விடுமுறை நாட்கள் என்பதால் ஆணையரின் அனுமதி கிடைப்பது சாத்தியமில்லாமல் உள்ளது.

வேறொரு திகதி கொடுத்தாலும் நடத்திக்கொள்கிறோம். முற்றிலும் மறுக்கப்பட்டால் அனைத்து முகாம்களில் இருந்தும் ஆணையரிடம் நேரில் முறையிட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

TAGS: