ஒரு தலைவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நரேந்திர மோடி நல்ல உதாரணம்!

narendra_modiAஇந்தியா ஞானபூமி என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. இந்த உலகில் போற்றப்படுகின்ற அத்தனை ஞானவான்களின் பிறப்பும் இந்தியாவிலேயே நடந்தது.

ஞானிகளின் பிறப்பும் புனித கங்கை ஆற்றின் ஓட்டமும் மிகப் பிரமாண்டமான புனித தலங்களின் இருப்பும் இந்திய தேசத்தை ஞானபூமி ஆக்கின எனலாம்.

இந்திய தேசத்தின் அரசியலில் கூட, தத்துவ ஞானிகளும் தர்மவான்களும் ஆட்சி செய்தனர்.

எதிர்த்தரப்பிற்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற உயர்ந்த ஜனநாயகப் பண்பு அங்கிருப்பதன் காரணமாகவே உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடு என்ற பெருமையை இந்தியா தனதாக்கிக் கொண்டது.

எத்தனை இனங்கள், எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள், எத்தனை மாநிலங்கள் என்ற பிரிவுகளிலும் இந்தியன் என்பதில் அங்கு ஏற்படக் கூடிய ஒற்றுமை உலகில் வேறெங்கணும் காண இயலாது எனலாம்.

இத்துணை பெருமை மிக்க இந்தியாவில் இப்போது இருக்கக் கூடிய பிரதமர் நரேந்திர மோடி நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மிகப்பெரும் சாதனை வெற்றியைப் பெற்றவர்.

உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதில் அவர் காட்டும் ஆர்வம் என்பதற்கு அப்பால், இந்திய தேசத்தை அபிவிருத்தியின் முதல் நாடாக மாற்றுவதில் அவர் வகுத்துள்ள திட்டங்கள் மிகப் பெறுமதியானவை.

அது மட்டுமன்றி, இலங்கைத் தமிழர்களின் விடயம் பற்றியும் அவர் நன்கு அறிந்து வைத்துள்ளமை, அண்டை நாட்டின் பிரதமருக்குரிய சிறப்புப் பண்பின் உன்னதத்தைக் காட்டுகிறது.

2009ம் ஆண்டில் வன்னியில் நடந்த கொடும் யுத்தத்தில் ஈழத்தமிழர்கள் பட்ட பேரவலத்தை அவர் அறிந்திருந்தமையாலும், அப்போது இந்தியாவின் ஆட்சியில் இருந்த காங்கிரஸார் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தனர் என்ற உண்மையை உணர்ந்திருந்ததன் காரணமாகவும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்று உணரமுடியும்.

அதேசமயம் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்திப்பதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்த கருத்து, ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கான சமிக்ஞை என்று பொருள் கொள்ள முடியும்.

இத்தகைய சிறப்புமிக்க பிரதமர் மோடியின் பிறந்தநாள் நாளை 17ம் திகதி ஆகும். இது குறித்து பிரதமர் மோடி இந்திய தேசத்து மக்களிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

எனது அன்பார்ந்த பாரதபூமியின் மக்களே! எனது பிறந்த தினத்தை எவரும் கொண்டாட வேண்டாம்.

எனது பிறந்த நாளை கொண்டாடவேண்டும் என நீங்கள் யாரேனும் விரும்பினால், அதற்காக நீங்கள் செலவிடக் கூடிய நிதியை, பல வழிகளாலும் பாதிப்படைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு கொடுங்கள் என்று அறிவித்துள்ளார்.

பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் வருகின்ற முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தை காஷ்மீர் மக்களுக்காக தியாகம் செய்யும் பிரதமர் மோடியின் பெருந்தன்மையை, எங்கள் அரசியல்வாதிகள் சிறிதளவேனும் அறிந்திருப்பது நல்லது.

ஒரு தலைவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு மோடி நல்ல உதாரணம்.

TAGS: