இலங்கையின் தற்போதைய ஆளும் அரசு தனக்கு துணையான அடிப்படைவாத சிங்கள பெளத்த அமைப்புக்களுடனும், அடிப்படைவாத சிங்கள இனத்தின் பெயரில் அரசியலை நடாத்தும் கட்சிகளுடனும் ,சிறுபான்மை ,சுயநல பதவி ஆசைகொண்ட அரசியல் கட்சிகளின் கூட்டணியிலேயே காலத்தை நீடிக்கின்றது.
பொதுவாக தென்
இலங்கை அரசியலில் அடிப்படைவாதிகள் என்றும் ,எப்போழுதுமே இனம்,மதம்,மொழி என்ற தத்தவத்துடன் லாபம் பெறும் இனமாக இருந்து வருவதும் அதன் மூலம் இலங்கையில் பிரபலங்களாவதும் சாதாரணமே. இந்த அடிப்படையிலேயே பல சிங்கள தலைவர்கள் இலங்கையின் ஆட்சி பீடத்தில் அமர்ந்தவர்கள் அந்த வழித் தோன்றலே இராஜபக்ஷ குடும்பமும்!
யாரை, எப்போது, எப்படி சமாளிக்கலாம் என்பது தென் இலங்கை அரசியல்வாதிகளின் கைவந்த கலை இவர்களின் 85 சதவீதமானவர்கள் இந்நிலையையே தங்களின் அடிப்படை கொள்ளையாக வைத்து அரசியலில், சமூக பொருளாதார கொள்கைகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். இந்நிலையே சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் ஏன் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது.
தென் இலங்கை தலைமைகள் என்றும், எதையும் இழக்கும் பண்பை கொண்டவர்கள் அல்ல, ஆனால் சாதிக்கவேண்டிய விடயங்களுக்காக எதையும் இழப்பது போல் தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வார்களே தவிர எதையும் எப்பொழுதும் இழக்க மாட்டார்கள், ஆனால் பேச்சு திறமை, நடவடிக்கையில் அப்பாவியாக பேசி மற்றவர்களை மடக்கும் திறமையுடன் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றிகொள்வார்கள். அதையே இன்றும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
அந்த அடிப்படையிலேயே இன்றும் திறமை, கல்வி என்று பல்துறைகளில் நிபுணத்தவத்துடன் இருந்த தமிழ் தலைமைகள் தென்னிலங்கையின் செயற்பாட்டால் மதிமயங்கி ஏமார்ந்தார்கள் அல்லது ஏமாற்றப்பட்டார்கள். அதுவே சுதந்திரத்துக்கு பின்பும் தமிழ் சமூகம் எதிர் நோக்கிய மாற்றம்!
தமிழ் தலைமைகளையும் புத்தி ஜீவிகளையும் பயன்படுத்தும் வரை பயன்படுத்திவிட்டு அவர்கள் நினைக்காத பதவிகளையெல்லாம் கொடுத்து மதிமயங்க வைத்து ஏமாற்றினார்கள், இதற்கு காரணம் தங்களின் எதிர்கால கொள்கைகளை இனி எப்போதும் எதிர்க்கவோ, புறக்கனிக்கவோ அல்லது எதிர் கருத்து எக்காலத்திலும் கூற கூடாது என்பதற்கே பதவிகள் பட்டங்களை தாராளமாக வழங்கினார்கள் என்பது யதார்த்தமாகும்.
மலையக தமிழ் அரசியல் வாதிகளை பொறுத்தவரை தோட்ட தொழிலாளர்களை எவ்வாறு கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கி அடிமையாக கம்பனி நிர்வாகத்திற்கு உட்படுத்தி உள்ளார்களோ அதே போல் தேசிய பிரச்சினைகளிலும் தங்களின் சுயநலத்திற்காக இம் மக்களை சுதந்திரமாக சிந்தித்து முடிவெடுக்கமுடியாதவாறு காய் நகர்த்தி கொண்டு இருக்கின்றார்கள்.
காரணம் இந்த தலைமைகள் எல்லாம் இரட்டை பிரஜாவுரிமையுடன் அரசியல் தொழிற்சங்க வருமானத்தை இந்நாட்டில் பெற்று இந்தியாவில் முதலீடு செய்து கொண்டு இருப்பவர்கள்.
தொழிலாளர்களை கண்கானிக்க தொழிற்சங்க முக்கியஸ்தர்களாக தங்களின் விசுவாசிகளை வைத்திருப்பது போல் அரசியல் சார்ந்த விடயங்களில் பிரதேச வர்த்தகர்கள் இடையே சாதி அமைப்புக்களை ஏற்படுத்தி அவர்களுடன் நல்லுறவை பேணி பெருதோட்ட தொழிலாளர்களை தினசரி கடன்காரர்களாக இருப்பதையும் அவர்களின் நோக்கங்களை வர்த்தகர்கள் மூலம் அறிந்து அதற்கான திட்டங்களை நடைமுறைபடுத்துகின்றார்கள்.
ஆகவே சொத்து குவிப்பு கலாசாரத்தை கொண்ட தலைமைகளுக்கு அரசும் துணைபுரிகின்றது.
எனவே மலையக தலைமைகள் என்றும் அரசுக்கு எதிராகவோ அல்லது சிறுபான்மை மக்களின் உரிமை தொடர்பாகவோ வாய்திறக்க மாட்டார்கள்.
இன்று காலத்தின் மாற்றத்தால் தமிழினத்தின் பாதிப்பை உணர்ந்த போதும் தலைமைகளினால் அதை நியாயப்படுத்த முடியாத மாயவலைக்குள் வீழ்ந்துவிட்டார்கள். எனினும் தமிழ் தலைமைகள், தமிழினம் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற விதத்தை கட்டாயமாக சிந்திக்கின்ற நிலை ஏற்படும் போது அரசு இன துவேசத்தை ஏற்படுத்தி அடக்கியாளும் தந்திரத்தை ஏற்படுத்துகின்றது உலகறிந்த உண்மை.
இது நிரந்தரமாகும் என்று அரசு நினைத்த பொழுது சர்வதேச தொடர்பும், தொடர்பாடலும் ஒத்துழையாமையால் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியது.
எனினும் சிறுபான்மையினரின் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க விரும்பாவிட்டாலும் சுயநலத்துடன் சொகுசு வாழ்வு வாழவிரும்பும் தமிழ் இனத்தை சார்ந்த பல தலைமைகளை தங்கள் வசப்படுத்தி அவர்கள் மூலம் சர்வதேசத்திற்குள் இந்தநாடு சமஉரிமையுடன் சகலரையும் நடத்துகின்றது என்ற பிரமையை ஏற்படுத்தினார்கள்.
ஆனால் அவைகள் அனைத்தும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்த அரசு இப்பொழுது அபிவிருத்தி என்ற போர்வையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை மூடி மறைக்கும் அதி முக்கிய ஆயுதத்தை தங்களின் கையில் எடுத்து இன்று இலங்கை அபிவிருத்தி அடைகின்றது என்ற மாபெரும் போர்வையில் இனப்பிரச்சினையை மூடி மறைத்துக் கொண்டு வருகின்றனர்.
உலகத்தையும் உலக தலைவர்களையும் தமிழ் தலைமைகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி கொண்டு இருக்கின்றது. இதற்கு ஆதரவு வழங்கும் சில சிறுபான்மை தலைவர்களும், உலக தலைமைகளும் புத்திஜீவிகளும் தங்களின் மனசாட்சிக்கும் சமூகத்திற்கும் என்றோ ஒரு நாள் பதில் கூறியே ஆகவே வேண்டும்.
எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்திற்கு காட்டும் ஒளிப்படமாக இருக்கின்றது அபிவிருத்தியென்ற போர்வையில் அதன் உள்ளே சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு இன்றி முடக்கப்பட்டுவருகின்றது.
ஜனாதிபதியால் ஒர் புதிய தீவு உருவாக்க முடியுமானால், சட்டத்தை தனக்கு வேண்டியமுறையில் மாற்றமுடியுமானால் சர்வ அதிகாரமும் தன் கையில் இருக்கும் போது பேச்சுவார்த்தை என்ற இழுத்தடிப்பு கபட நாடகம் ஏன்? ஜனாதிபதி ஒரு நாளும் இனபிரச்சினையை தீர்க்க விரும்பாதவர் என்பதே இதற்கு காரணம் ஆகும்.
இதை தற்போதைய தமிழ் தலைவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். இந்த இனபிரச்சினை தொடருமா?அல்லது முடிவுக்கு வருமா?என்பது ஒவ்வொரு சிறுபான்மை மக்களுக்குள்ளும் இருக்கின்ற ஒரு கேள்விகுறி! நடக்கும் என்பார்கள் ஆனால் நடக்காது
நடக்காது என்பார்கள் ஆனால் நடக்கம்
கிடைக்கும் என்பார்கள் ஆனால் கிடைக்காது
கிடைக்காது என்பார்கள் ஆனால் கிடைக்கும் இது ஓர் கவிஞனின் பாடல் வரி என்றாலும் இதில் பல உண்மைகள் அடங்கியுள்ளது.
அறியுமா இந்த அரசு?