ஜெனீவாவில் யுத்தக் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச விசாரணைகள் தொடர்பான இடைக்கால வாய்மூல அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் அல் ஹுசைன் இன்று இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் 27வது மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கிறார்.
‘ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரதி ஆணையாளர் ப்ளாவியா அல்லது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சன்ட்ரா பெய்டா ஆகியோரில் ஒருவர் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கயை வெளியிடவுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை குறித்த வாய்மூல அறிக்கைக்கு உடனடியாகவே இலங்கை தரப்பில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜெனீவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் இலங்கையின் சார்பில் பதிலளிப்பார்.
அதுமட்டுமன்றி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வாய்மூல அறிக்கை குறித்து மனித உரிமைகள் பேரவையில் இன்றைய தினம் உரையாற்றவுள்ளன. ஏற்கனவே நேற்றுமுன்தினம் இலங்கை குறித்த வாய்மூல அறிக்கைகவுன்ஸிலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையின் ஊடாக அனைத்து இலங்கையினரதும் நலனுக்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணை செயற்பாட்டுடனும் ஐ.நாவின் விசேட ஆணையாளர்களுடனும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுமாறு இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.