இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்க்கும் அந்நாட்டின் நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து எகிப்து, அல்ஜீரியா, அங்கோலா, வங்கதேசம், பெலாரஸ், பொலிவியா, சீனா, கியூபா, ஈக்வடார், இந்தோனேசியா, ஈரான், வட கொரியா, மியான்மர், நிகராகுவா, பாகிஸ்தான், ரஷியா, தெற்கு சூடான், சூடான், உகாண்டா, வெனீசுலா, ஜிம்பாப்வே ஆகிய ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளது. ஏற்கெனவே அந்த விவகாரம் குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தேவையற்றது என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இலங்கையில் சர்வதேச விசாரணை மேற்கொள்வது, அந்நாட்டின் இறையாண்மையைக் குலைப்பதாக அமையும் என இந்தியா கூறியிருந்தது.
இதைக் காரணம் காட்டி, ஐ.நா. மனித உரிமை ஆணையம் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, அதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.