இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் இணைந்து மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்:வசந்த பண்டார

vasantha_bandara_001இந்தியாவும் அமெரிக்காவும், இலங்கை அரசாங்கத்தின் சில பங்காளிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதித்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு 51 வீத வாக்குகள் கிடைப்பதை தடுக்க கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலுள்ள சிறு சிறு கட்சிகளை தமது பக்கம் இழுத்துக்கொண்டுள்ளதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் பயன்படுத்தி அத்தோடு அரசிலுள்ள சில அதிகாரப் பரவலாக்கலை ஆதரிப்போரையும் இந்தியாவையும் அமெரிக்காவையும் இணைத்துக்கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை தோல்வியடையச் செய்து அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகின்றது.

இதன் ஒரு கட்டம்தான் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையே நடக்கப்போகும் பேச்சுவார்த்தையாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த இரண்டு தமிழ், முஸ்லிம் இனவாதக் கூட்டு இன அடிப்படையில் வாக்குகளை சிதற செய்து மஹிந்தவுக்கு நூற்றுக்கு 51 வீத வாக்குகளை கிடைக்காமல் செய்து பேரம் பேசும் பலத்தை தமது கையிலெடுத்துக் கொண்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும்.

இதன்போது சிறு சிறு கட்சிகளும் அரசிலுள்ள அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கும் குழுவினரும் இதே நிலைப்பாட்டை எடுக்கும்.

அதேவேளை 3ஆவது தடவையாக ஜனாதிபதிக்கு போட்டியிட முடியாது என்ற ஒரு கருத்தை எதிர்க்கட்சியினர் இப்போதிருந்தே ஏற்படுத்தி வருகின்றனர்.  இதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வென்றால் அவ்வெற்றி திருட்டுத்தனமாக பெறப்பட்டது என பிரசாரம் செய்வதற்கும் பயன்படுத்தவுள்ளது எனத் தெரிவித்தார்.

TAGS: