இந்த நாடு சுடுகாடாக மாறும்: ஹஸன் அலி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

hasan_aliஇந்த நாட்டில் முப்பது வருடகாலமாக யுத்தம் நடத்தமைக்குரிய காரணங்களைக் கண்டு, அரசாங்கம் அதற்குரிய சரியான தீர்வினைக் காணாவிட்டால் இந்த நாடு சுடுகாடாக மாறுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தம் நடந்து முடிந்தும், ஏன் இந்த யுத்தம் நடந்ததென்பது அரசாங்கத்திற்குத் தெரியாமலுள்ளது.

ஏன் இந்த யுத்தம் நடந்தது, எப்படி யுத்தம் ஆரம்பித்தது என்ற பிரச்சினைகளைத் தேடி அதற்கான சரியான காரணங்களைக் கண்டு, அக்காரணங்களுக்கு சரியான தீர்வைக் காணாவிட்டால் இந்த நாடு சுடுகாடாக மாறுமென்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இன்று இந்த நாட்டில் சமூகங்களை வழிநடத்த வேண்டிய விழுமியங்கள் யாவும் கெட்டுப்போயுள்ளன.

இனவாதம், அரசாங்கம், அரசியலுள்ள சில அமைச்சர்கள் – சில அரசியல் கட்சிக்ள என சமூகத்தை வழி நடத்தவேண்டிய விழுமியங்களனைத்தும் கெட்டுப்போயுள்ளன. இதை அரசு புரிந்தும் புரியாமல் நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் பீதியடையும் வகையில் மோசமான இனவாத போக்கு கக்கும் நாடாக இந்த நாடு இன்றுள்ளது.

ஒரு முஸ்லிமைக் கண்டால் அவன் தலிபான் அல்லது அல்கெய்தா அமைப்பு என்பதும் ஒரு தமிழரைக் கண்டால் புலிகளமைப்பு என்பதும் இன்று இனவாதம் கக்குவோரின் வழக்கமாகிவிட்டது.

ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் பேச்சு நடக்கப்போகிறது என்றாலே சிலருக்கு மட்டுமன்றி சில சிங்கள ஊடகங்களுக்கும் அடிவயிற்றைக் கலக்குகின்ற நிலைமை இன்று உள்ளது.

ஏதோ இணைந்து தேர்தலில் நிற்கப்போவதாகவும், தனிநாடு, தமிழ்நாடு கோரப் போவதாகவும், சிங்கள சமூகத்திற்கு எதிராக அணிதிரளப் போவதாகவும் கற்பனை செய்துகொள்கின்றனர்.

விஷமத்தனத்துடன் நோக்குகின்றனர். நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஒரே பிராந்தியத்தில் வழங்கிறோம்.

பக்கத்து வீட்டுக்காரருடன் நாம் பேசினால் அது பிழையான விடயமாகுமா? திட்டமிட்ட சதியாகுமா?

இன்றைய நிலையில் வடகிழக்குப் பிராந்தியத்தில் இனத்துவேஷங்களைக் களைந்துவிட்டு நாம் தமிழ் பேசும் மக்களென்ற வரையறைக்குள் ஒற்றுமையாக சிந்தித்து இதயசுத்தியுடனும் வேறுபாடுகளை மறந்தும் ஒற்றுமைப்படவேண்டும்.

இந்த ஒற்றுமை உறுதியாகவிருந்தால் மட்டும்தான், இப்பிராந்தியத்தின் மீது பிரயோகிக்கக்கூடிய, வெளியிலிருந்து வரக்கூடிய அழுத்தங்களிலிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றார்.

TAGS: