மோடியை விரைவில் சந்தித்து 13ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம்! பொதுபல சேனா தேரர்

podupalasenaதமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாகவும் 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாகவும் அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார். எனவே, விரைவில் மோடியை நாம் சந்திக்கவுள்ளோம். இவ்வாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பு – கிருலப்பனையில் அமைந்துள்ள போதி பெளத்த நிலையத்தில் நேற்று நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கின்றோம். ஆனால், இந்தியாவினால் பலாத்காரமாகத் திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தி எதிர்க்கின்றோம். இதனால் இலங்கைக்கும் மக்களுக்கும் எதுவிதமான நன்மையும் கிடைக்கவில்லை.

இன்று நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் தமது வேட்பாளர் யார் என்பது குறித்தே இன்னும் முடிவு செய்யாமல் இருக்கின்றன.

ஐக்கியத் தேசியக் கட்சியை எடுத்துக்கொண்டால் அதன் தலைவர் ரணில் என்றும் பிறகு சோபித தேரர் என்றும் மாறி மாறி ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

எம்மைப் பொறுத்தவரை நாம் எந்தக் கட்சிக்கும் இதுவிடயத்தில் ஆதரவளிக்கப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஏனெனில், எமக்கு நாட்டில் வாழுகின்ற சிங்கள – பெளத்த மக்களில் இருப்பே முக்கியமாகும். இவர்களைப் பாதுகாத்து இவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதே எமது ஒரே நோக்கமாகும்.

இதற்கெல்லாம் இணங்கக்கூடிய ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவாராயின் எமது ஆதரவை நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்போம்.

இதேநேரத்தில், ஐக்கியத் தேசியக் கட்சியும் வீதி சமிக்ஞை விளக்கைப்போல வேட்பாளரை நொடிக்கு நொடி மாற்றிக் கொண்டிருக்காது மிக விரைவில் தங்கள் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து தெளிவாக அறிவித்தால் எமது நிலைப்பாட்டையும் அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.

பொதுபலசேனா அமைப்பானது அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் எதிரானது அல்ல. ஆனால், ஒன்றுக்கும் உதவாத – சிலரின் சுயலாபத்திற்காக கொண்டுவரப்பட்ட இந்த 13 ஆவது திருத்தத்திற்கு நாம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தொடர்பிலான ஆரோக்கியமான அணுகுமுறையைக் கையாள்கிறார். இதனை வரவேற்கின்றோம். ஆனால், தமிழ் நாட்டின் அழுத்தம் காரணமாகவும் 13ஆவது திருத்தத்தின் உள்ளடக்கம் தெரியாததன் காரணமாகவும் அதனை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கின்றார்.

எனவே, விரைவில் மோடியை நாம் சந்திக்கவுள்ளோம். இதன்போது பயனற்ற 13ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவுபடுத்துவோம் என்றார்.

TAGS: