மக்கள் மனதினை வெல்லக் கூடிய எந்தத் தீர்வினை அரசாங்கம் முன்வைக்கவில்லை: த.கலையரசன்

kalai_ampara_well_001போரினை முடிவிற்கு கொண்டுவந்து விட்டோம் என்று கூறும் அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான எந்தவொரு தீர்வையும் அவர்களது மனதினை வெல்லக்கூடிய வகையில் முன்வைக்கவில்லை என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கிணறுகளை அமைத்துக்கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக சுவிஸ் சூரிச் சிவனாலயத்தின் அன்பே சிவம் அமைப்பினூடாக, முதற்கட்டமாக நான்காம் கிராமம் மத்திய முகாம் ஒன்றில் கிணற்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.

அன்பே சிவம் அமைப்பின் உறுப்பினர் கா.ராஜிதன் தலைமையில் நேற்று காலை 10.00 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்விற்கு,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், மேல்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுவர்ணராசா, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இராசையா,

இலங்கைளில் உள்ள அன்பே சிவம் அமைப்பின் அனைத்து மாவட்டங்களுக்குமான இணைப்பாளர் குமணன், ஆலய பிராதம குரு சுபேந்திரன் ஆலய தலைவர் த.சித்திரகுமார், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

த.கலையரசன் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழர்கள் என்ற ஒரே காரணத்தினால் மக்களை சென்றடைய வேண்டிய அனைத்து அபிவிருத்திகளும் தடைப்பட்டிருக்கின்றன.

அபிவிருத்தி என்பது தமது இருப்பினை உறுதி செய்யக்கூடிய அபிவிருத்தியாக இருத்தல் வேண்டும். அதனை விடுத்து அபிவிருத்தி என்று கூறி எமது சமூகத்தினை ஏமாற்றி கொண்டு அரசியல் நடத்துகின்றார்கள். இதில் எமது மக்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

அம்பாறை மாவட்டமானது போர்ச்சூழலால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசம். இங்கு விடுதலைப் போராட்டத்திற்காக பல தளபதிகளை உருவாக்கி பல களங்களை கண்ட பிரதேசம்.

இந்த பிரதேசத்தில் தற்போதைய சூழலில் சாதாரண விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிர் செய்ய முடியாத அளவிற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

நாவிதன்வெளி  பொறுத்தவரையில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் ஒரு பிரதேசமாகும். அதனடிப்படையிலே அன்பே சிவம் அமைப்பினர் வடகிழக்கில் யுத்தத்தினால் பெரிதுதம் பாதிக்கப்பட்ட இடங்களை இனங்கண்டு அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றார்கள்.

அதனொரு கட்டமாகவே இவ்வமைப்பினர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஐந்து கிராமங்களை இனங்கண்டு அக்கிராமங்களில் கிணறுகளை அமைப்பதற்கான அனைத்து வேலைப்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார்கள்.

எமது தாயக உறவுகளின் தேவைகளை இனம் கண்டு பல அமைப்புக்கள் தற்போது மகத்தான சேவைகளை செய்து வருகின்றன.

இந்தச்சேவையானது தொடர்ந்து நடைபெற வேண்டும் இவர்கள் போன்று புலம்பெயர் நாட்டில் உள்ள ஏனைய அமைப்புக்களும் எமது மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தமிழர்கள் சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்ட அனைத்து சான்றுகளும் உள்ளன: முன்னாள் தவிசாளர் இராசையா

1947ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை சுதந்திரமடைந்து கல்லோய குடியேற்றம் மீளமைக்கப்படும் வரையும் தமிழர்களே அனைத்து திணைக்களங்களிலும் உயர் பதவி வகித்து வந்தார்கள். இதுதான் எமது தமிழ் இனத்தின் வரலாறு என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இராசையா தெரிவித்தார்.

சுவிஸ் சூரிச் சிவனாலயத்தின் அன்பே சிவம் அமைப்பினூடாக, நான்காம் கிராமம் மத்திய முகாம் ஒன்றில் கிணற்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வானது அன்பே சிவம் அமைப்பின் உறுப்பினர் கா.ராஜிதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்லோயத்திட்டத்தின் முதலாவது ஆய்வறிக்கையை எடுத்துப் பார்ப்போமாக இருந்தால், தமிழர்களுடைய ஆய்வறிக்கையின் அடிப்படையிலே கல்லோயா குடியேற்றத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வேளையில் பூர்வீக குடிகளாக இருந்த தமிழ் மக்கள், கல்லோய குடியேற்றத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மானாவாரி நெற்செய்கையினை மேற்கொண்டிருக்கும் இந்த நிலத்தில் பொன் விளையும் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் அது இறுதிவரை நிறைவேறவில்லை.

கல்லோயா குடியேற்றத்திட்டத்தில் தமிழர்களுக்கென்று 6 குடியேற்றத்திட்டங்கள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் 150 குடும்பங்களை ஒவ்வொரு குடியேற்றத்திற்கும் முன்மொழிந்திருந்தார்கள்.

இங்கு மக்கள் குடியேற்றப்பட்டிருந்தும் கூட 1956, 57 இல் இந்த நாட்டிலே ஏற்பட்டிருந்த இனக்கலவரங்களினால் பெரும்பான்மை சிங்களவர்களினால் தமிழர்கள் அந்த இடத்தில் இருந்து அடித்து துரத்தப்பட்ட வரலாற்றினை எண்ணிப்பார்க்க முடியாது.

அதன்பின்னர் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் நீர்வளம் வழங்கப்படாமல் தொடர்ந்து, அந்த இடத்தில் எஞ்சியிருந்த தமிழர்கள் பலவந்தமாக பேரினவாதிகளினால் துரத்தப்பட்டு அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களையும் தன்வசப்படுத்தினார்கள் இதற்கான அனைத்து சான்றுகளும் தற்போதும் எம்மிடம் இருக்கின்றது.

இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் 7 தடவைகளுக்கும் மேலாக தமது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்திருக்கின்றார்கள்.

தற்போதும் கூட அந்த நிலமையைத்தான் பார்க்க முடிகின்றது. காரணம் ஒரு காலத்தில் இந்தப்பிரதேசம் மிகவும் செல்வச் செழிப்பு மிக் கஒரு பிரதேசமாக காட்சி தந்தது. ஆனால் இன்று யுத்த காலத்தில் இருந்ததனைப் போன்றே காட்சி தருகின்றது.

அரசாங்கம் மீள்குடியேற்றம் என்று கூறினாலும் அது பாதிக்கப்பட்ட மக்களை உரிய விதத்தில் சென்றடையவில்லை அதுவும் அறைகுறையாகவே மக்களை சென்றடைந்திருக்கின்றது.

அரசாங்கத்தின் அடிவருடிகளாக இருப்பவர்கள் அபிவிருத்தி என்ற மாயையை காட்டி எமது மக்களை திசை திருப்பப்பார்க்கின்றார்கள். அது மாத்திரமல்ல தமிழர்கள் என்ற அடையாளத்தினை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவர்களால் பல திட்டங்கள் தீட்டப்பட்டு செயற்படுத்தியும் வருகின்றார்கள்.

புலத்திலே வாழ்கின்ற மக்கள் பல மணி நேரம் தங்களை வருத்தி அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு தொகையினை வடகிழக்கில் வாழும் மக்களுக்காக அனுப்பி வைக்கின்றார்கள். அதனை நாங்கள் சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.

இந்த அமைப்பின் செயற்பாடானது அனைத்து  பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கும் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. இனிவரும் காலங்களிலும் இவர்களது செயற்பாடு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றார்.

TAGS: