வடக்கில் காணிகளினிலிருந்து இவ்வருட இறுதிக்குள் இராணுவம் வெளியேற வேண்டும்! வடமாகாணசபை உத்தரவு!!

northern_provincial_councilவடமாகாணசபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த வருட இறுதிக்குள் தனியாருக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்களில் இருந்து இலங்கை இராணுவம் உட்பட முப்படைகளும் வெளியேற வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சியான கூட்டமைப்பினால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் எதிர்க்கட்சி நடுநிலைமை வகித்திருந்தது. அதேவேளை வடக்கு மாகாணசபைக்கு காணி விவகாரங்கள் தொடர்பினிலுள்ள அதிகாரங்கள் தொடர்பில் கருத்தில் கொண்டு அவற்றை அமுல்படுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் வடமாகாண காணி ஆணையாளர் கூட்டத்திற்கு சமூகமளித்திராத நிலையில் அவர் யாரது அதிகாரத்திற்கு உட்பட்டவரென கேள்வி எழுப்பப்பட்ட போதும் இறுதி வரை பதில் கிடைத்திருக்கவில்லை.

வடமாகாணசபையின் காணி சுவீகரிப்பு தொடர்பான காணி விசேட அமர்வு இன்று காலை முதல் கைதடியிலுள்ள பேரவை கட்டடத்தில் இடம்பெற்றிருந்தது. கூட்டமைப்பு சார்பு உறுப்பினர்கள் பலரும் தமது மாவட்டங்களில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தினர்.

இராணுவம், காவல்துறை, கடற்படை, விமானப்படையென காணி சுவீகரிப்பு தொடர்வதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் விவாத முடிவில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

TAGS: