இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை என்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடக சந்திப்பில் அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம் ஏன் இன்னும் அமைக்காமல் இருக்கின்றது என்று பிபிசி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைப்பதில் அரசாங்கத்திற்கு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லாத் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லையா என்று பிபிசியின் கொழும்பு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, ‘இல்லை, இல்லை, அந்த எல்லா பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்பதை தெளிவாகக் கூறுகின்றேன்’ என்று பதிலளித்தார் அமைச்சர்.
‘சுதந்திரமாக இந்தப் பிரச்சனையை ஆராயக்கூடியவர்கள் என்பதாலேயே இந்த நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அதன்மூலம் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் முடியுமானளவு நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கும் பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது’ என்றும் கூறினார் கெஹெலிய ரம்புக்வெல்ல.
நல்லிணக்க ஆணைக்குழுவின் 180 பரிந்துரைகளில் 144 பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளரின் தலைமையிலான ஆணைக்குழு ஊடாக இதுவரை 45 பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்தது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பீரிஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 85 வீதமானவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறினார்.
இதன்போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் எல்லா பரிந்துரைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என்று அவர் கூறியிருக்கவில்லை என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
போரின் முடிவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு, இலங்கை தொடர்பான ஜெனீவா மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானங்களில் கோரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. -BBC