இலங்கையின் வடபகுதிக்கு மூன்றுநாள் விஜயமாகச் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளதுடன் விடுதலைப்புலிகள் நடத்திவந்த வங்கியில் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு தொகுதியை உரிமையாளர்களான 25 பேரிடம் கையளித்துள்ளார்.
தனி நாடு கேட்டுப் போராடி வந்த விடுதலைப்புலிகள், கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு நடத்திவந்த நிர்வாகத்தில் நடத்திய வங்கியில், அரச வங்கிகளைப் போன்று சேமிப்பு, தங்க நகை அடகு வைத்தல், கடன் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அடகு வைத்திருந்த நகைகள் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தன.
ஆயினும், அந்த தங்க நகைகள் பற்றிய விபரங்கள் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்த நிலையிலேயே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை ஐந்து ஆண்டுகளின் பின்னர் உரியவர்களிடம் வழங்குவதாகக் குறிப்பிட்டு, 25 பேருக்கு தங்க நகைகளை வழங்கியிருக்கின்றார்.
அத்துடன் யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 1,218 பேருக்கு இழப்பீட்டுத் தொகையாக 115 மில்லியன் ரூபாவையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கான அரச செயலகக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்த ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
‘வைக்கோல் பட்டறை நாய்’
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் விசேடமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஸ, விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றி, முப்பத்து மூவாயிரம் மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் வடமாகாண சபைக்கான தேர்தலில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்று தெரிந்திருந்தும் தேர்தலை நடத்தியதாகவும், ஆயினும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குப் போதிய அளவு நிதியை வழங்கியுள்ள போதிலும், அதனை மக்களுக்குப் பயன்படுத்தத் தவறியுள்ளதுடன், அரசாங்கமாகிய தாங்கள் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்களையும் அவர்கள் செய்ய விடுவதில்லை என்றும் குற்றம் சுமத்தினார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ‘வைக்கோல் பட்டறை நாயைப் போன்று’ மக்களுக்குரிய நலத் திட்டங்களைத் தாங்களும் செய்யாமல் மத்திய அரசையும் செய்யவிடாமல் தடுத்திருப்பதாக அவர் சாடியிருக்கிறார்.
புலம்பெயர்ந்த தமிழீழ அரசாங்கம் பற்றி குறிப்பிட்ட அவர், அவர்களுடன் எதிர்க்ட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சென்று பேச்சுக்கள் நடத்தியிருப்பதாகத் தெரிவித்ததுடன், இந்த நாட்டில் தனிநாடாக ஈழம் அமைப்பதையோ, நாட்டைப் பிரிப்பதையோ ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, வடபகுதி மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, ஒன்றுபட்ட நாட்டில் வாழ முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். -BBC
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை இது.தமிழ் தேசிய கூட்டமைப்பினரை “வைக்கோல் பட்டரை … என்று அந்த சிங்கள …படுத்தியது அதிக பிரசங்கி தனமானது.தண்ணியடித்து உளறியிருக்கிறான் அந்த சட்டித் தலையன்.