இலங்கைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் எதிர்காலத்திலும் தொடர்ந்து உதவிகளை வழங்கும். யாழ்தேவி ரயில் சேவை இன்று (நேற்று) ஆரம்பிக்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது என்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கான யாழ்தேவி ரயில் சேவை நேற்று உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் பளை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது பளை ரயில் நிலையத்தில் வைத்து யாழ்தேவி ரயிலுக்குள் பிரவேசித்த இந்திய உயர் ஸ்தானிகர் கேசரிக்கு மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ்ப்பாணம் கொழும்பு யாழ்தேவி ரயில் சேவை இன்று (நேற்று) முதல் ஆரம்பிக்கப்படுவது பெரு மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்த சேவையை ஆரம்பிக்க பங்களிப்புச் செய்த நாடு என்ற வகையில் இந்தியா மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றது. இதேநேரத்தில் இப்பணியை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை அரசுக்கும், இந்தியாவின் ‘இர்கொன் ‘ நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உண்மையில் இந்தியா இந்த ரயில் பாதையை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் பாரிய ஒத்துழைப்பை வழங்கியது. அதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோருக்கும் மீண்டுமொருமுறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதேவேளை இந்தியா இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்து வருகிறது. எதிர் காலத்திலும் முன்னுரிமை அடிப்படையில் இலங்கைக்கு உதவி செய்யும் எனவும் கூறினார்.