இலங்கை அரசு எம்மை திரும்பிப் பார்க்கவில்லை! இடம்பெயர்ந்த மக்கள் குற்றச்சாட்டு!!

இடம்பெயர்ந்த எம்மீது சர்வதேச நாடுகள் காட்டும் இரக்கத்தில் சிறு துளியேனும் இலங்கை அரசு காட்டவில்லை. யுத்ததால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர சகலதையும் கொடுத்து விட்டோம் எனக் கூறும் அவர்கள் எமது சொந்த இருப்பிடத்தை விடுவதற்கு இன்னும் தயாராக இல்லை என்று வலி வடக்கு முகாம் மக்கள் பிரிட்டிஸ் பிரதி தூதுவர் லோறாவிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

எமது இறுதி மூச்சு இருக்கு வரையில் கடைசி ஆசையும் நோக்கமும் சிந்தனையும் எமது மண்ணிற்குச் செல்;ல வேண்டும் என்பது தான் இதனை விடுத்து மாற்று வழி எதனையும் ஏற்கத் தயாரில்லை என்றும் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஐயம் மேற்கொண்ட பிரிட்டின் நாட்டு பிரதி தூதுவர் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சுண்னாகம் சபாபதிப்பிளை முகாமிற்குச் சென்று முகாம் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு மக்கள் தெரவித்துள்ளனர்.

இதன் போது அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் இடம் பெயர்ந்து முகாம்களில் பல்வேறு கஸ்ட துன்பங்களுக்கு மத்தியில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றோம். குறிப்பாக அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்கின்ற எமக்கு அரசால் வழங்கப்பட்ட நிவாரணமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினர்களும் நேரடியாகவே வந்து பார்வையிட்டிருக்கின்ற போதும் இதுவரையில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
குறிப்பாக 1990 ஆம் ஆண்டு 15 ஆம் திகதி நாங்கள் அங்கிருந்து வெளியேறும் போது விரைவாக திரும்பிப் போவோம் போவோம் என்றே வந்தோம். அன்றிலிருந்து இன்று வரை விடுவோம் விடுவோம் என்றும் சொல்லி வருகின்றனர். ஆனால் இன்று வரையில் அந்த நாள் விடியவே இல்லையா என்றும் கேள்வியெழுப்பினர்.

ஆனால் வீடு வாசல்கள் அற்ற நிலையில் முகாம்களில் அகதிகளாக ஏன் அநாதைகளாக வாழ்ந்து வருகின்ற நிலையில் எமது நிலத்தில் ஆடம்பரமாக உல்லாச வாழ்கை வாழ்ந்து வருவதுடன் எமது நிலத்தில் விவசாயம் செய்து அதனை அவர்கள் விற்க நாம் அதனை வாங்கும் நிலையே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

யுத்தத்தில் இழந்த உயிர்களைத் தவிர எல்லாத்தையும் வழங்குவோம் எனக் கூறுகின்ற அரசாங்கம் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகியும் இன்னமும் எமது நிலத்தை வழங்குவதற்கு தயாராக இல்லை. நாம் இந்த அரசாங்கத்திடம் தொடர்ந்தும் தொடர்ந்தும் கோருவது எமது நிலத்திற்கு எம்மை விட வேண்டுமென்று தான்.

ஆனால் அதற்கு அரசு தயாரில்லை. எமது நிலத்தில் அரசாங்கம் என்ற ஒரு தரப்பினர்களுக்கு இவ்வளவு நிலமும் வேண்டுமென்றால் நாம் எங்கே போவது. எமது மண்ணை விட்டாலே போதும் நாம் அங்கு சென்று வாழ்வோம். மனிதனுக்கு என்றைக்கோ ஒரு நாள் சாவு நிச்சயம் வரும் அந்தச் சாவு கூட எங்களுக்கு எமது மண்ணிலேயே நடக்க வேண்டுமென்றே இன்று வரை நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஏனெனில் இங்கு வாழ்வதற்கு இடம் இல்லாத அதே வேளை நாம் இறந்தாலும் எம்மைப் புதைப்பதற்கும் இடமில்லை என்ற நிலையிலையே நாம் இருக்கின்றோம். இவ்வாறு நாம் அனுபவிக்கின்ற கஸ்ரங்கள் துன்பங்களை இங்கு வருகின்ற வெளிநாட்டு தூதுவர்கள் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறி வந்திருக்கின்றோம். இவ்வாறு எமது பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச நாடுகள் காட்டும் அக்கறையை அரசாங்கம் காட்டுவதில்லை என்றும் எமது மண்ணிற்கு நாம் செல்லதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

TAGS: