தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்! அனந்தி அழைப்பு!

ananthi_sasitharan_1போர் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது எனக் கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வருடக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டுமெனப்பலமுறை வடமாகாணசபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தவொரு முன்னேற்றமும் காணப்பட்டிருக்கவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார் அனந்தி சசிதரன்.

அரசியல் கைதிகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்:

1983ல் இருந்து இன்றுவரை சிறையில் தமிழ் இளைஞர்கள் மட்டும் படுகொலை செய்யபட்டும்,துன்புறுத்தப்பட்டும் வருவது அனைவரும் அறிந்ததொன்றே. சிறையில் திடீர் திடீரென தமிழ் அரசியல் கைதிகள் மரணமடைவதும் அதற்காக அரச தரப்பில் நியாயங்கள் கூறப்படுவதும் உண்மைகள் மறைக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்றவிடயமே இலங்கை தமிழரசுக்கட்சி மாநாட்டின் போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இன்று வரை எந்த ஆக்கபூர்வமான பதிலும் கிட்டியிருக்கவில்லை.

சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் படும் துன்பம் கொஞ்சம் நஞ்சமல்ல. சிலமாதங்களுக்கு முன்பு அனுராதபுரம் சிறைச்சாலையினில் தமிழ் அரசியல் கைதிகளுக்கும் சிங்கள கைதிகளுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் சிறை உத்தியோகத்தர்களால் தமிழ் கைதிகள் மட்டும் தாக்குதலுக்குள்ளாகியமை பற்றி நாம் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தோம்.

எனினும் தமிழ் அரசியல் கைதிகள் அமைதியாக தங்கள் விடுதலையை நோக்கி காத்திருந்தபோது சிங்கள கைதிகளுடன் அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் அடைத்து வைத்தனர். இதையடுத்து அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு சாகும்; வரை உண்ணாவிரதபோராட்டத்தை 8 நாட்கள் நடத்தியதை தொடர்ந்து அவர்களை பழைய படியே தமிழ் அரசியல் கைதிகளின் சிறையில் அடைப்பதாக கூறிவிட்டு இன்று வரை அந்த வாக்குறுதியை சிறைஅதிகாரிகள் நிறைவேற்றியிருக்கவில்லையென்பதை அறியமுடிகிறது.

கடந்த 5ம் திகதி; அநுராதபுரம் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மத்தியில் சிங்கள கைதிகளை (போதைவஸ்து,கஞ்சா,அபின் கடத்திய குற்றஞ்சாட்டிய கைதிகள்) அனுப்பி அவர்கள் பொய்யான குற்றசாட்டுகளை இனத்துவேசமான சிறை அதிகாரி உபுள் தெனியநிசாந்தவிடம் தெரிவித்து சிக்க வைத்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் மூன்று தமிழ் அரசியல் கைதிகளை புலிகளா? எத்தனை சிங்களவரை கொன்றீர்கள்? எனக்கேட்டு மோசமாக தாக்கியுள்ளனர். இதனால் கை முறிந்து மயக்கமுற்று நடக்கமுடியாமலும் கோரமாக தாக்கப்பட்டு மீண்டும் சிங்களக கைதிகளின் சிறையில் அடைக்கப்பட்டு சிகிச்சை கூட வழங்காது வைத்திருக்கும் காட்டுமிராண்டித்தனம் தொடர்கின்றது.

சட்டமும் நீதியும் இந்தநாட்டில் தமிழர்களுக்கு மட்டும் புதைகுழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டதா? மனிதம் மரணித்தபூமியில் நீதியையும் நியாயத்தையும் நாங்கள் எங்கே தேடமுடியும்? நரகம் என்ற ஒன்று இருப்பது என்றால் அது சிறீலங்காவில் தமிழர்களுக்காக இருக்கும் சிறைக்கூடம் மட்டுமே என்பதே உண்மையாகும்.

போதிய உணவோ,மருத்துவமோ,சுகாதாரவசதியோ,சட்டஉதவியோ இன்றி நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவதை நாம் அனைவரும் கண்டும் காணாது மௌனம் காப்பது மனவேதனையை அளிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் பாரபட்சமாகசிறையில் அடைக்கப்படுவது,துன்புறுத்தப்படுவது,சித்திரவதை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். சிங்களக் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளைஅடிப்பது,துன்புறுத்துவது,நிறுத்தப்படவேண்டும்.அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் சிறைககாவலாளிகளால் துன்புறுத்தப்படுவதும் நிறுத்தப்படவேண்டும்.

அத்துடன் காலவரையறை விதிக்கப்பட்டு சகலதமிழ் அரசியல் கைதிகளைவிடுவிக்கப்பட வேண்டும்.வடக்குகிழக்கு மக்களின் நல்லெண்ணத்தை இந்த அரசு பெற்றுக்கொள்ளவேண்டுமானால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவ்வாறில்லாமல் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் மக்களை அணி திரட்டி அகிம்சை வழி போராட்டங்களை; முன்னெடுக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவிப்பதோடு அனைத்து தமிழ் உறவுகளையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: