தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் சிங்களம் திணிக்கப்படுகிறது: கலையரசன்

kalநீர்கொழும்பு புத்தளம் போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசம். அப்பிரதேசங்களில் இன்று சிங்களம் திணிக்கப்பட்டு தமிழோ அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக அங்கு தமிழர்கள் இன்று வாழமுடியாத சூழ்நிலையிலே உள்ளார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கலாபூசணம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தெய்வங்கள் மீது பொழிந்த பாமலர்கள் இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று கல்முனை மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் கலாநிதி எஸ். கணேஸ் தலைமையில் கல்முனை நால்வர் கோட்டத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலாநிதி பரதன் கந்தசாமி சிறப்பதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாவாணர் அக்கரைப்பக்கியன் சேனைக்குடியிருப்பு பிள்ளையார் ஆலயம், கல்முனை ஆலயம், துறைநீலாவணை கண்ணகியம்மன் ஆலயம், துரைவந்திய மேடு பிள்ளையார் ஆலயம், அக்கரைப்பற்று ஆலயங்களின் பெருமையினை பாடிய ஒன்பது பாடல்களின் தொகுப்பே இறுவெட்டாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்,

மேல் மாகாணத்தில் உள்ள சில இடங்களில் தமிழர்களுக்கு என்ன கதி நேர்ந்திருக்கின்றதோ அதே கதிதான் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் ஏற்பட வேண்டும் என்பதில் இந்த அரசு குறியாக இருந்து செயற்படுகின்றது.

நாங்கள் தமிழையும், சமயத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ போராட்ட வடிவங்களை ஏற்படுத்தி போராடியிருந்தோம். ஆனால் இந்த நாட்டிலே இனிவரும் காலங்களில் தமிழையும் சமயத்தினையும் தக்கவைக்க முடியுமா? என்ற வினா அனைவர் மனதிலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் 1956ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்திருக்கின்றார்கள். அதன் பின்னர் உருவான யுத்த சூழல் காரணமாக எமது இனம் அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களை படிப்படியாக இழந்து வந்திருக்கின்றது. அந்த காலகட்டத்தில் இந்தப் பிரதேசத்திலே துணிந்து நின்று கல்விக்காக பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்.

சமய குரவர்களால் பாடல் பெற்ற பல தலங்கள் இருக்கின்றது. அந்த தலங்கள் எங்களுக்கானதுதானா என்ற கேள்வி எம்மனதில் எழுகின்றது. அந்தளவிற்கு எமது ஆலயங்களை இருந்த இடமே இல்லாமல் செய்யும் நிலையினை இந்த சிங்கள பேரினவாதிகள் தற்போது கையாள்வதனை காணமுடிகின்றது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 400 வருடங்கள் பழமை வாய்ந்த சங்கமங்கண்டி முருகன் ஆலயத்திற்கு சென்று பக்தர்கள் வழிபட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். காரணம் அந்த ஆலயத்தினை இந்த அரசு தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்தியிருப்பதாக அறிவித்திருக்கின்றது.

எங்களுடைய சமூகத்திற்காக முன்னெடுக்க வேண்டிய பல விடயங்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது அந்த விடயங்களை இந்த மாவட்டத்திலே இருக்கின்ற கல்வியலாளர்கள் புத்திஜீவிகள் எம்மைப்போன்ற அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது எழுந்திருக்கின்றது.

பாவாணர் அக்கரைப்பாக்கியன் எமது சமூகத்திற்காக பல முன்னெடுப்புக்களை செய்திருக்கின்றார். அந்த வகையில் பின்தங்கிய கிராமங்கள் தோறும் சென்று கல்வி அறிவினை புகட்ட வேண்டும் என்பதற்காக கல்முனையில் உள்ள மாணவர் மீட்பு பேரவையுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரு பெரும்தகை.

எதிர்காலத்தில் இங்குள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படாமல் விடுவோமாக இருந்தால் எமது இனம் இந்த பிரதேசத்திலும் வாழ்ந்திருக்கின்றதா என்ற கேள்வியினை எதிர்காலச் சமூகம் எம்மை நோக்கி விரலினை நீட்டக்கூடிய சந்தர்ப்பம் உருவாவதில் எந்த ஐயமும் இல்லை எனவும் கூறினார்.

TAGS: