அபிவிருத்தி என்பதற்காக எமது உரிமைகளைப் விட்டுக்கொடுக்க முடியாது. அற்ப சலுகைகளுக்காக நாம் வாக்களிப்போமாக இருந்தால் அது எமது இனத்திற்குச் செய்யும் துரோகமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி கிராமத்தில் லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் நிதியுதவியின் மூலம் மட்டக்களப்பு உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் படுவான்கரை மீனவர்களுக்கு வலைகள், தோணிகள் என்பன வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது தமிழ் மக்களும் சலுகைகளுக்காக ஒருபோதும் வாக்களித்ததாக சரித்திரம் கிடையாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் எவ்வித சலுகையும் இல்லை என்று தெரிந்தும் எமது இனத்திற்கான தனித்துவத்தினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவே தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தங்கள் வாக்குகளை வழங்குகின்றார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
நாம் வாக்களிப்பது தமிழர் என்கின்ற எமது தேசிய இனம், நாம் தமிழ் மக்கள் என்று சொன்னால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பது அனைத்து தமிழர்களினதும் கடமையாகும். ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கின்றது. நாம் பௌத்தர்களாக இருந்தால் நிச்சயமாக ஒரு சிங்களக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நாம் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு தனித்துவமாக கட்சிகள் இருக்கின்றது. அவர்கள் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்கவும் மாட்டார்கள் வாக்களிப்பதும் தவறு. அதுபோலவே தமிழர்கள் நாங்கள் எமது தனித்துவம் கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்று சொன்னால் எமது நிலம் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
எமது தற்துணிவினை நாம் தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கத்தான் வேண்டும். இதனை நாம் மனதார கிரகித்துச் செய்ய வேண்டிய கடமை உரிமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்றது.
65 வருடங்களாக எமக்கு சுதந்திரம் வேண்டும் உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறுபட்ட தியாகங்களை போராட்டங்களை மேற்கொண்டோம். 30 வருட அகிம்சை முப்பது வருட ஆயுதம் என்று தற்போது இராஜதந்திர ரீதியிலும் போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியாகச் சென்றிருக்கின்றது இதற்கு காரணம் எமது தமிழ் மக்கள் உறுதியாக தனித்துவத்தினை பேணியதன் காரணமாகத்தான் இன்று இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தற்போது அண்மைய செய்திகளைப் பார்த்தீர்களாக இருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையினை நீக்கம் செய்து விட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 27 நாடுகள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை இந்தியா அமெரிக்கா போன்ற ஏறக்குறைய 40 நாடுகள் தடை செய்திருக்கின்றது. தற்போது அதில் உள்ள சில நாடுகள் அத்தடையினை நீக்கியுள்ளது. இந்த தடை நீக்கமானது எமது பிரச்சனை சர்வதேச ரீதியில் சென்றுள்ள நேரத்தில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது.
இது அடுத்த கட்டத்திற்கான அதாவது எமது தேசியப் பிரச்சனையை பேசித் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் எவ்வாறு இருந்தாலும் எதை இழந்தாலும் எமது இறுதி இலக்கை அடைவதற்காக எம்மை நாங்கள் பலப்படுத்தியவர்களாகவும் எம்மை நாமே ஆளக் கூடிய தலைமை தேவை என்பதை உள ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது மக்களுக்கு இவ்வாறான உதவிகள் புரிகின்ற எமது புலம்பெயர் உறவுகளின் நிறுவனங்கள் அவர்கள் வெளிநாடுகளில் இரவு பகலாக அந்த குளிருக்குள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தில் ஒரு தொகையினை எமது தாயக மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று சேகரித்து அதன் மூலமே இவ்வாறான உதவிகள் புரிகின்றார்கள். அவர்களின் இவ் உதவிகள் வீணாகிவிடக் கூடாது.
இதன் மூலமான நல்ல பிரதிபலிப்புகளை நாம் அவர்களுக்கு காட்ட வேண்டும். இவ்வாறு இந்த வெளிநாட்டு அமைப்புகளில் பெரும்பாலும் வடமாகாண மக்களே இருக்கின்றார்கள். அவர்களுக்குள் வடக்கு கிழக்கு என்ற பாகுபாடு இல்லை. அவர்கள் தமிழர்கள் எமது இனம் என்ற ஒரு சிந்தனையிலேயே எமது மாகாண மாவட்டங்களுக்கு உதவிகள் புரிகின்றார்கள். அவர்கள் வழங்குகின்ற இவ்வுதவிகளை நாம் சிறப்பாக பயன்படுத்துகின்ற போது மேலும் மேலும் பல உதவிகளை அவர்களிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களும் எமக்கு உதவிகள் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றார்கள்.
எமது வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாம் மதிக்க வேண்டும் அது எமது உரிமையுமாகும். அபிவிருத்தி என்பதற்காக நாம் எமது உரிமைகளைப் விட்டுக்கொடுக்க முடியாது. அற்ப சலுகைகளுக்காக நாம் வாக்களிப்போமாக இருந்தால் அது எமது இனத்திற்குச் செய்யும் துரோகமாகும். அவ்வாறு நாம் செய்வோமாக இருந்தால் எமது இனத்தை மொழியை குலத்ததை மதத்தினை அனைத்தையும் நாம் கொல்கின்றவர்களாகவே கருதப்படுவோம்.
கடந்த தேர்தல்களில் எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் இருந்திருந்தால் எமது மாவட்டத்தில் படுவான்கரையின் எல்லைக்கிரமாங்களின் அத்துமீறிய சிங்கள மயமாக்கல் இடம்பெற்றிருக்கும் அதனை தடுத்து நிறுத்தியவர்கள் இன்று தடுத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமே ஏனைய அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் வெறுமனே அவர்களின் சுகபோகங்களை பார்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள். எமது இனத்தின் நிலம், மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றைத் தக்க வைத்துக்கொள்ள இருக்கும் ஒரே கட்சி எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் தான்.
எனவே இவ்வாறான விடயங்களை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இனி தேர்தல் வரப் போகின்றது பலர் வருவார்கள் பலர் பலவாறான கருத்துக்களைக் கூறுவார்கள். நாம் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஆனால் அது தொடர்பில் ஆளமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.