இராக் தலைநகர் பாக்தாதுக்கு அருகே திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 24 பேர் பலியாகினர்.
பாக்தாதுக்குத் தெற்கேயுள்ள ஜுர்ஃப் அல்-சகார் என்ற இடத்தில் இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்தது. வாகனம் ஒன்றில் வெடிபொருள்களை நிரப்பி வந்த ஒருவர் அதனை ராணுவ சோதனைச் சாவடி மீது மோதி வெடிக்கச் செய்தார். இந்த வாகனம், ராணுவத்தினர் பயன்படுத்தும் ஹம்வீஸ் ரகத்தைச் சேர்ந்ததாகும்.
இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 24 பேர் கொல்லப்பட்டனர். இருபத்தைந்து பேருக்கும் மேல் காயமடைந்தனர். கடந்த ஜூலை மாதம் முதல், இப்பகுதி இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடும் சண்டையைத் தொடர்ந்து, இப்பகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவான சன்னி பிரிவுப் படையினர் கணிசமானோர், இப்பகுதியில், ராணுவத்துக்குத் துணையாக செயல்பட்டு வருகின்றனர்.