இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கையெழுத்தாகவுள்ளதாக பிரதி திறைசேரி செயலாளர் எஸ் ஆர் ஆட்டிக்கல தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த உடன்படிக்கை 2014ஆம் ஆண்டு இறுதியில் கையெழுத்தாகயிருந்தது. எனினும் சில தடைகளினால் அது பிற்போடப்பட்டு வந்தது.
இலங்கையில் சீனா 2005ஆம் ஆண்டில் 28.39 மில்லியன் டொலர்களை முதலிட்டது.
2013ஆம் ஆண்டில் அந்த முதலீடு 121.63 மில்லியன் டொலர்களாக அதிகரித்தது.
இந்தநிலையிலேயே இரண்டு நாடுகளும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ளவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் தாதியர் பணிப் புறக்கணிப்பு
நாளை 29ம் திகதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அரசாங்க தாதியர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
தமது மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது போனால் இந்தப்போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று அந்த சங்கம் எச்சரித்துள்ளது.
அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரட்னபிரியவின் குற்றச்சாட்டின்படி 12வருடங்கள் சேவையாற்றியும் 24 தாதியருக்கு கிழக்கு மாகாணசபை, சேவை இடமாற்றத்தை வழங்கவில்லை.
அத்துடன் கிழக்கு மாகாணசபை உரிய இடமாற்றங்களை மேற்கொள்வதில் தோல்வியும் கண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்
ஒரு வாரத்துக்குள் விடுவிக்கப்படுவர் என்ற உறுதிமொழியை அடுத்து யாழ்ப்பாண சிறையில் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்த 24 தமிழக மீனவர்கள் அதனை கைவிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்று தமது போராட்டத்தை ஆரம்பித்தனர். தாம், தமது படகுகளுடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
இதேவேளை இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலை அடுத்து நேற்று கடலுக்கு சென்ற 631 படகுகள் தொழில் செய்யாமலேயே கரைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 24 வியாபாரிகளுக்கு தண்டம் விதிப்பு
மட்டக்களப்பில் வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 24 பேருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிவான் நீதிமன்றம் தலா இரண்டாயிரம் ரூபா தண்டப் பணம் விதித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வயது குறைந்த சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யப்படுவதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மண்முனை வடக்கு மற்றும் மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் நேற்று இந்த திடீர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண மது வரித்திணைக்களத்தின் உதவி ஆணையாளர் பண்டார மற்றும் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மது வரித்திணைக்கள அத்தியட்சர் என்.சோதிநாதன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மது வரித்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான குழுவினர் வர்த்தக நிலையங்களில் இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நேற்று காலை தொடக்கம் பிற்பகல் நான்கு மணிவரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.
குறித்த வியாபாரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கு என்ற காரணத்தினால் நீதிபதியினால் எச்சரிக்கை செய்யப்பட்டு தலா இரண்டாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
21வயதுக்கு குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று ஏனைய பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.