வட மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு பூர்த்தியின் பின்னர் மாகாண சபை அமர்வு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் ஒருவருட பூர்த்தியின் பின் இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் மாதாந்தக் கூட்டம் நடைபெறுகின்றது. இன்றைய கூட்டத்தில் கடந்த ஒருவருட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் அவைத்தலைவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தியினை அடுத்து இன்று மாதாந்தக் கூட்டம் நடைபெற்று வருகின்றது. குறித்த காலப்பகுதியில் பல விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் நாம் வாழ்வுரிமைப் பிரச்சினை, அரசியல், மீள்குடியேற்றம், இராணுவ பிரசன்னம் , காணி அபகரிப்பு, வாழ்வாதார பிரச்சினை என பல்வேறு விடயம் குறித்தும் இங்கும் பேசப்பட்டது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதற்கமைய 138 தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
காணி உள்ளூராட்சி உட்பட 26 தீர்மானங்கள், கல்வி தொடர்பில் 10 தீர்மானங்கும், சுகாதாரம் தொடர்பில் 02 தீர்மானங்களும், சமூக அரசியல் தொடர்பில் 01 தீர்மானம், விவசாயம், சுற்றாடல் தொடர்பில் 08 தீர்மானங்களும், பிரதம செயலாளர் மற்றும் திணைக்கள தலைவர்கள் குறித்து 18 தீர்மானங்களும், சமூக பொருளாதாரம் தொடர்பில் 10 தீர்மானங்களும் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்ட தீர்மானங்கள் என 63 திர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளது.அதற்கான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தீர்மானங்கள் உரிய அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளோம்.
அத்துடன் நிதி நியதிச் சட்டம் , முத்திரை கைமாற்றுச் சட்டம் என்பன இயற்றப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தீர்மானம் உள்ளிட்ட பல விடயங்களை மேற்கொண்டுள்ளோம். எனினும் ஏனைய 8 மாகாண சபைகளும் 25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற போது 25 வருடங்களுக்குப் பின்னர் ஆரம்பமாகிய சபை என்றாலும் நாம் கௌரவமாகவும் முன்னுதாரணமாகவும் நடந்து வருகின்றோம்.
அதற்கும் மேலாக பல விமர்சனம் இருந்தாலும் நாம் கௌரவமாகவும், எடுத்துக் காட்டாகவும் செயற்பட்டு வருகின்றோம். எங்களை தெரிவு செய்த மக்களுக்கு எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்தும் சேவை செய்வோம்” என்றும் அவர் மேலும் தெரிவிததிருந்தார்.