2015 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு முதலில் சபாநாயகர் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன்.
நாட்டினுடைய ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மாண்புமிகு மகிந்த ராஜபக்ச அவர்கள் 2015 இல் வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு தனது 10 ஆவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஓர் வரவு செலவுத் திட்டமாகவும் ஜனாதிபதி இதனைக் காட்ட முனைந்துள்ளார். துறைசார் ஊழியர்கள், மாணவர்கள், ஓய்வூதியம் பெறுவோர் என எல்லாத்தரப்பினருக்கும் நிவாரணம் அளிப்பது போன்ற மாயத்தோற்றம் ஒன்றை காட்டவும் ஜனாதிபதி முனைந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக் கொள்ளும் கபடத்தனத்தைத் தவிர வேறு எதனையும் இந்த வரவு செலவுத்தி;ட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. ஜனாதிபதியின் முன்மொழிவுகளுக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகின்றார் என்பது பற்றி அவரது உரையில் எங்கும் குறிப்பிடவில்லை. அவரது வரவு செலவு திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்பாகவே தேர்தல் வந்து விடும், எனவே இலகுவாக மக்களை ஏமாற்றிவிட முடியும் என்பதுதான் ஜனாதிபதியின் எண்ணமாகவும் இருக்கும். எனவே நாட்டு மக்கள் எல்லோரையும் முட்டாளாக்குவதற்கான வரவு செலவுத்திட்டமே தவிர நாட்டையோ, மக்களையோ முன்னேற்றுவதற்கான வரவு, செலவு திட்டமல்ல.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
17 வது திருத்தச் சட்டம் அகற்றப்பட்டு, நீதி மன்றம், பொதுச் சேவை, பொலிஸ் சேவை, இலஞ்ச ஒழிப்பு, மனித உரிமை, தேர்தல் ஆணையாளர் என அனைத்துமே அரசியல் மயமாக்கப்பட்டு ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் என்று ஆனபிறகு இவற்றின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் பல ஆயிரம் மில்லியன்களால் மக்களுக்கு என்ன பிரயோசனம்.
யுத்தம் முடிந்து 5 வருடமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பட்டுகொண்டிருப்பதன் நோக்கமென்ன? யுத்தம் இல்லாத நாட்டில் ஓர் யுத்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. பாதுகாப்பிற்காக 285 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணம் இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது. தனியாருக்கு சொந்தமான 67000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவ தேவைகளுக்கான கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றது. மக்கள் மீள் குடியேற முடியாமல் முகாங்களில் நிர்க்கதியாய் இருக்க, அவர்களது காணிகளில் இராணுவம் விவசாயம் செய்வதும், கொல்ப் மைதானம் அமைப்பதும், ஹோட்டேல்கள் கட்டுவதும் எமது மண்ணில் தான் நடைபெறுகின்றது, புலிகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டார்கள். அவர்களால் இனி தலைநிமிர முடியாது எனப் பிராச்சாரத்தை மேற்கொள்ளும் அரசு, விடுதலைப்புலிகளை எவ்வாறு அழித்தோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு கற்றுக் கொடுப்பதற்காக வருடாந்தம் பாரிய மகாநாடுகளையும் நடாத்தி வருகின்றது. பயங்கரவாதத்தை அழித்த முதலாவது நாடு என்று மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கம் என்ன காரணத்திற்காக பாதுகாப்பு செலவீனங்களை அதிகரித்து வருகின்றது என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். 200,000 இராணுவத்தில் வடக்கில் 150,000 இராணுவம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 10 இலட்சம் மக்கள் உள்ள வடக்கு மாகாணத்திற்கு 150,000; இராணுவம் தேவையா? என்பதை தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். சராசரியாக 6 தமிழ் மக்களுக்கு 1 இராணுவம் என்ற விகிதாசாரத்தில் இருக்கின்றது. இவ்வாறான 6-1 என்ற நிலை இலங்கையில் அதிலும் வடக்கு மாகாணத்தில் மட்டும் தான் இருக்கின்றது. ஏறத்தாழ 20,000,000 மக்கள் கொண்ட தென்பகுதியில் 30,000 இராணுவம் மாத்திரமே நிலை கொண்டுள்ளது. அது 666 மக்களுக்கு 1 இராணுவம் என்ற அடிப்படையிலேயே அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்களை இவ்வளவு மோசமான இராணுவ அடக்கு முறைக்குள் வைத்துக் கொண்டு என்ன அடிப்படையில் நீங்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு கேட்பீர்கள்? இல்லையேல் என்ன அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு கேட்பீர்கள்?
பாகிஸ்தான், பர்மா, ஈராக், லிபியா போன்ற நாடுகளைப் போன்று எமது ஜனாதிபதியும் ஓர் இராணுவ ஆட்சியை நோக்கி பயணிப்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. ஆனால் அந்த நாடுகள் எவ்வளவு மோசமான பாதிப்புக்களை அடைந்துள்ளது என்பதும், ஜனநாயகம் எவ்வளவு தூரம் அங்கு கேலிக்குள்ளாக்கப்படுகின்றது என்பதையும் சிங்கள மக்கள் உணர வேண்டும். இன்று தமிழ் மக்களுக்கெதிராகத்தான் இந்த இராணுவம் செயற்படுவதாக பெரும்பான்மை சிங்கள மக்கள் யோசிக்கலாம். ஆனால் அது நாளை சிங்கள மக்களுக்கெதிராகவும் மாறும். வெலிவேரியாவில் தண்ணீர் கேட்ட மக்களுக்கு இலங்கை இராணுவம் கொடுத்த பரிசு என்ன என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
சீன ஜனாதிபதியும், ஜப்பான் பிரதமரும் வருகை தந்ததன் பின்னர்தான் இந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி பெருமை பேசினார். ஆனால் சீன ஜனாதிபதி வருமுன் சீன நீர்மூழ்க்கிக் கப்பல் கொழும்புத்துறைமுகத்திற்கு வந்ததன் நோக்கமென்ன என்பதையும் ஜனாதிபதி தெளிவுப்படுத்த வேண்டும். ஒரு பக்கம் வடக்கு மாகாணத்தில் பெருந்தொகையான இராணுவ குவிப்பு மறு புறத்தில் சீன நீர்மூழ்கிகளுக்கு வரவேற்பு இவையெல்லாம் இந்தியாவை எச்சரிக்கை செய்யவா என கேட்க விரும்புகின்றேன். அண்மையில் இந்தியா சென்ற உங்கள் பாதுகாப்பு செயலாளரிடம் இது தொடர்பான தனது விசனத்தை இந்தியா வெளியிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் கவனத்தில் எடுத்தால் நிலமை எப்படி சீர்கெட்டு செல்கின்றது என்பதை அறியலாம்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றை எட்டுவதன் மூலம் இலங்கையின் இராணுவ தேவையை சரி அரைவாசிக்கு மேலாக குறைக்கலாம். இதனால் மிஞ்சும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை பொருளாதார அபிவிருத்திக்கு செலவிட முடியும். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயற்பாடுகளால், இலங்கை விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச பிரச்சினைகளை விலைக்கு வாங்கிக் கொள்கின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
பாதுகாப்;பிற்காக 285 பில்லியன் ஒதுக்கியிருக்கின்ற அதேவேளை சுகாதாரத்திற்காக 139.5 பில்லியன் ரூபாயும், கல்விக்கு 47.6 பில்லியன் ரூபாயும், உயர் கல்விக்கு 41.1 பில்லியன் ரூபாயும், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்சிக்கு 4.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்தியை விட தேசிய பாதுகாப்பிற்கு அநாவசியமாக அள்ளியிரைக்கின்றது என்பது தெளிவாகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இலங்கை அரசாங்கம் உட்கட்டமைப்புகளை பெருக்கி வருவதாகவும். நவீன் காப்பட் வீதிகள், மின்சாரம், தொலைத் தொடர்பு என மக்களுடைய தேவைகளை பெருக்கி வருவதாகவும் பிரச்சாரம் செய்கின்றது. வேளிநாட்டு இராஜதந்திரிகளை வடக்கின் வளர்ச்சியினை சென்று பார்க்குமாறும் வேண்டுதல்கள் வைக்கின்றது. வடக்கு மாகாணத்திலுள்ள 150,000 இராணுவத்தின் விரைவான செயற்பாட்டுக்காகவே இங்கு வீதிகள் போடப்படுகின்றன. இவர்கள் அமைக்கும் வீதிகள் யாவும் வடக்கில் இருக்கும் இராணுவ முகாங்களை ஓன்றிணைப்பதை நேரடியாக செல்பவர்கள் பார்க்க முடியும். கிராமத்து வீதிகள் பாலங்களை திரும்பி பார்க்காத அரசு, இராணுவ முகாம்கள் உள்ள காடுகளுக்குள்ளும் வீதிகளை செப்பனிடுகின்றது. எனவே இந்த வரவு செலவு திட்டம் வடக்கு மாகாணத்தின் கிராமங்களில் எந்த விதமான மாறுதல்களையும் கொண்டு வரப்போவதில்லை.
வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் 84000 விதவைகள் உருவாக்கப்பட்டார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரங்கள், எதிர்காலத் திட்டமிடல்கள் என்று யுத்தத்திற்கு பின்னர் கொண்டு வரப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் எதுவும் கிடையாது. தாய் தந்தையரற்ற 12000 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இவர்களுக்கான திட்டமிடல்கள் இல்லை. இதே போன்று யுத்தத்தால் நிரந்தரமாக ஊனமுற்றோர் அல்லது மாற்று திறனாளிகள் என்போருக்கு எந்தவித தி;ட்டமிடல்களும் கிடையாது. இவ்வாறான திட்டமிடல்களை மேற்கொள்ள வடக்கு மாகாணசபையையும் அனுமதிக்க ஜனாதிபதி மறுக்கின்றார். முதல்வர் நிதியம் ஒன்றை ஆரம்பித்து அதனூடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்;க வடக்கு மாகாணசபை முன்வைத்த சட்ட நகலையும் ஜனாதிபதியின் கைத்தடியான ஆளுநர் தடுத்து நிறுத்தியுள்ளார். இவ்வாறான ஒர் சூழ்நிலையில் இந்த வரவு செலவுத்திட்டம் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்த விதமான நிவாரணத்தையும் கொடுக்கப்போவது கிடையாது.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
வன்னி பெரு நிலப்பரப்பு யுத்தத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. இங்குள்ள கட்டிடங்களில் ஏறத்தாழ 160,000 கட்டிடங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ அழிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்திய அரசாங்கம் வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்துக்குமாக இணைந்து 50,000 வீடுகளுக்கான உதவிகள் செய்து அவ்வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால் வீடுகள் சேதமாக்கப்பட்டு மீதமாக இருக்கும் 100,000 க்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது வீடமைப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளதா? என்றால் இல்லை. இவ்வாறான ஓர் வரவு செலவுத்திட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கப்போதில்லை.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
இந்த அரசாங்கத்தின் 10 வருட கடினப் பயணமானது பயங்கரவாதத்தை அழித்து, ஜனநாயகத்தை உருவாக்கிய முன்னேற்றகரமான பயணமென ஜனாதிபதி கூறுகின்றார். பயங்கரவாதம் அழிக்கப்பட்டதென்ற பெயரில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள். 10,000 விடுதலைப்புலிகளை புனருத்தாரணம் செய்து சமூகத்துடன் இணைத்துள்ளோம் என்று கூறுகின்றார்கள். அப்படியாயின் 20,000 மேல் காணாமல் போயுள்ளதாக உண்மைகளை கண்டறியும் குழுவிற்கு காணாமல் போனோரின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளார்களே? இவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள். உயிருடன் இருக்கின்றார்களா? கொல்லப்பட்டு விட்டார்களா? இதுதான் நீங்கள் கூறும் ஜனநாயகமா? வடக்கில் உள்@ராட்சிமன்ற தேர்தல், மாகாணசபை தேர்தல் ஆகியவற்றை நடாத்தி முடித்து ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளோம் என்று அடிக்கடி கூறுகின்றீர்கள். 2009 ஆம் ஆண்டு நடாத்தப்பட வேண்டிய தேர்தல் இந்தியாவின் அழுத்தம் காரணமாக 2014 இல் நடைபெற்றது. ஆனால் இன்று வரை அதற்கான அதிகாரங்களை கொடுக்க மறுத்து வருவதை உலகறியும். நீங்கள் கூறும் ஜனநாயகம் என்பது தமிழ் மக்களுக்கல்ல என்பதை பல்வேறுபட்ட செயற்பாடுகள் மூலம் நீங்கள் நிரூபித்து வருகின்றீர்கள். ஆனால் அதிகாரங்கள் இல்லாமலும், மத்திய அரசின் ஒத்துழைப்பில்லாமலும் இருந்த போதிலும் கூட வட மாகாணசபை அங்குள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாவை வேதனமாக வழங்கி வருகின்றது. ஆனால் நீங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் 2500 ரூபா கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளீர்கள். அப்படி பார்க்கின்ற பொழுது வட மாகாணசபை நிர்வாகம் சற்று முன் கூட்டியே சிந்திக்கின்றது என்பதில் நாங்கள் பெருமை கொள்ளலாம். அதே போன்று வடமாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களுக்கு இதுவரை கிடைத்து வந்த 6000 ரூபாவுக்கு மேலதிகமாக 4000 ரூபா கொடுக்கப்பட்டு மாதாந்தம் 10000 ரூபாவை பெற்றுவருகின்றார்கள். ஆனால் இப்பொழுதான் நீங்கள் 3500 அதிகரித்து 9500 ரூபா கொடுப்பதாக பிரகடனப்படுத்துகின்றீர்கள். அவ்வாறு பார்க்கின்ற பொழுது வட மாகாண நிர்வாகம் உங்களிலும் விட கொஞ்சம் முன் கூட்டியே சிந்திக்கின்றது என்று எடுத்துக் கொள்ளலாம். வட மாகாணத்திற்கு ஏறத்தாழ 5000 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதனை வட மாகாணசபை செலவு செய்யவில்லை எனவும், பெருமளவிலான நிதி திரும்பி செல்லப் போவதாகவும் ஜனாதிபதியாலும் அவரது ஊது குழல்களாலும் மீண்டும் மீண்டும் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது, வட மாகாணசபை நிர்வாக்ததிறைமையற்ற சபையென மக்கள் மத்தியில் ஓர் தவறான கருத்தை உருவாக்கி அதனூடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையீனத்தையும் வெறுப்பையும் உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். ஆனால் வடக்கு மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏறத்தாழ 5000 மில்லியன் ரூபாய்களில் 1800 மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே மாகாண சபைக்கூடான செலவீனமாகும். மிகுதி 3200 மில்லியன் ரூபாய்களும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடு செலவிடப்படும் தொகையாகும். மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட 1800 மில்லியன் ரூபாயில் மீண்டு வரும் செலவீனங்கள் போக அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டது சில நூறு மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே. அத்தொகுதி நிதியாவும் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் செலவு செய்யப்பட்டு விடும். ஆனால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வடக்குக்கென ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடாமல் பெருமளவில் முடக்கி வைத்திருப்பதுடன் தங்களது கபடத்தனங்களை மறைக்க வட மாகாண சபை மீதும் பழி சுமத்தி வருகின்றது.
இவை ஒரு புறமிருக்க, அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, தனியார் துறைகளில் வேலை செய்வோருக்கு ஊதிய உயர்வு என்று அறிவித்த ஜனாதிபதி இலங்கையில் இருக்கக்கூடிய கூட்டுறவு துறை ஊழியர்களை கண்டு கொள்ளவே இல்லை. கூட்டுறவு சங்கங்களுக்கு வருமானம் இல்லையேல் சம்பளமே கேள்விக்குறி என்ற நிலைப்பாட்டிலேயே இலட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுகின்றார்கள். எனவே கூட்டுறவுத் துறை ஊழியர்களை இனியாவது அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
ஜனாதிபதி தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையை முன்னேற்றுவதற்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகின்றார். துறைமுகம், விமானத்தளம், சர்வதேச மகாநாட்டு மண்டபம், விளையாட்டு திடல்கள் என இவற்றை அடுக்கி கொண்டே போகலாம். சில சமயங்களில் அம்பாந்தோட்டையை தலைநகரமாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகம், விமானநிலையம் யாவுமே சீனாவின் எதிர்கால இராணுவத் தேவைக்களுக்கு பயன்படுத்துவதற்கே என்பதே பல ஆய்வாளர்களின் முடிவாக இருக்கின்றது.
பல ஆயிரம் கோடி வருமானமீட்டக் கூடிய முதலீடுகள் இங்கு முடக்கப்பட்டிருக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது முழுக்க முழுக்க சீனாவின் இராணுவ தேவைகளுக்கு பயன்பட போகின்றதே தவிர இலங்கையின் பொருளாதார நோக்கங்களுக்காக அல்ல. என்பதும் ஆய்வாளர்களின் கருத்ததாக இருக்கின்றது.
இவை ஒருபுறமிருக்க யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பகுதியில் 6300 க்கு மேற்பட்ட ஏக்கர் காணியை இராணுவம் கபளீகரம் செய்துள்ளது. இங்கு தான் பலாலி விமானநிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியன அமையப் பெற்றுள்ளன. பலாலி விமான நிலையம் 1970 கள் வரையில் கட்டுநாயக்கவிற்கு அடுத்த சர்வதேச விமான நிலையமாக இருந்து வந்தது. இங்கிருந்து தமிழ் நாட்டின் திருச்சிக்கு விமானப் போக்குவரத்து இருந்தது. இன்று புலம்பெயர்ந்திருக்கும் 10 லட்சம் பேர்களில் பெரும்பான்மையினர் வட மாகாணத்தை சேர்ந்தோர். பலாலி விமான நிலையம் ஓர் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறுமாக இருந்தால் பெரும்பாலான புலம்பெயர் மக்களும், இந்திய மக்களும் பிரயாணம் செய்யும் விமான நிiலாயமாக இது மாற்றமடையும். இதனூடு வட மாகாணதத்தின் சுற்றுலாத்துறை முன்னேறுவதுடன், பொருளாதார ரீதியாகவும் பாரிய முதலீடுகள் இடம் பெறுவதற்குமான சாத்தியப்பாடுகள் நிறையவே இருக்கின்றன. ஆனால் அவ்வாறான வாய்ப்பான, சாத்தியப்படான இடங்களிற்கு தேவையான கட்டுமானங்களை அமைக்காமல் வர்த்தக ரீதியாக பொருத்தமற்ற இடங்களில் பல ஆயிரம் கோடிகளை தேவையற்ற விதத்தில் அரசு செலவு செய்கின்றது.
இதனைப் போன்றே தலை மன்னார், தமிழ் நாட்டின் தனு~;கோடி இணைப்பு பாலம் ஒன்றை இந்திய அரசின் கூட்டு முயற்சியுடன் உருவாக்குவதன் மூலம், இலங்கைக்கான இந்திய சுற்றுலாத்துறை பிரயாணிகளின் வருகை பல மடங்கு அதிகரிக்கும். இந்தியா மாத்திரமல்லாமல் நேபாளம், பூட்டான் போன்ற நாடுகள் கூட இவ்வசதிகளை பெருமளவில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதே போன்று இந்து, பௌத்த யாத்திரிகர்களின் தொகையும் பல மடங்கு அதிகரிக்கும்.
நடுத்தர வர்க்கத்திற்கு கீழ்ப்பட்ட பௌத்த மக்கள் கூட புத்தர் பிறந்த இடத்தை, ஞானம் பெற்ற இடத்தை ஒருமுறை தரிசிக்கும் சந்தர்ப்பத்தை பெறுவார்கள். அது மாத்திரமல்லாமல் ஏற்றுமதிகள் இறக்குமதிகள் அதிகரிக்கும் என்பதுடன், முதலீடுகளும் பெருமளவு அதிகரிக்கும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
நாட்டின் வறுமை மட்டம் வெகுவாக குறைந்து விட்டதாக ஜனாதிபதி அவர்கள் தனது வரவு செலவு திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் புள்ளி விபரத்திணைக்களத்தின் 2012-2013 ஆண்டுக்கான தரவுகளின் படி மேல் மாகாணத்தில் மாத்திரம் தான் வறுமை குறைவாக உள்ளது. ஆனால் கொழும்பின் சகல தெருக்களிலும் வாகன நெரிசல் இருக்கின்றதோ இல்லையோ யாசகம் பெறுவோர் தொகை மிக அதிகமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் ஆள் வீத வறுமை 1.4 வீமாகவும், கம்பஹாவில் ஆள் வீத வறுமை 2.1 வீதமாகவும், கலுத்துறையில் இது 3.1 வீதமாகவும் காணப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவில் ஆள் வீத வறுமையானது 28.8 வீதமாகவும், மட்டக்களப்பில் 19.4 வீதமாகவும், மன்னாரில் 20.1 வீதமாகவும் காணப்படுவதை ஜனாதிபதி தந்திரமாக மறைத்து விட்டார்.
மிக மோசமான யுத்தத்தை நடாத்தி மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்த அரசாங்கம் முல்லைத்தீவின் மணலாற்றில் தமிழ் மக்களின் காணிகளை பறித்தெடுத்து அவர்களின் விவசாய வளம் கொழிக்கும் நிலங்களை சிங்கள மக்களுக்கு கொடுத்து தமிழர்களை நடுத்தெருவிற்கு துரத்திய அரசாங்கம், தமிழ் மக்கள் பாரம்பரிமாக கடற்றொழில் செய்த இடங்களில் புதிய சிங்கள மீனவர்கள் குடியேறுவதற்கு அனுமிதியளித்து தமிழ் மீனவர்களின் வயிற்றில் அடித்த அரசாங்கம் தமிழ் மக்களின் வறுமையை கண்டு கொள்ளுமென்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
சீனாவின் எக்சிம் வங்கியிலிருந்து பல நூறு மில்லியன் டொலர்களை மிக அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கி பெரும் தெருக்கள் அமைக்கும் ஒப்பந்தத்தையும் அவர்களுக்கே கொடுத்து அதாவது சீனர்களுக்கே கொடுத்து அதில் வேலைவாய்புக்களையும் அவர்களுக்கே கொடுத்து நெடுஞ்சாலைகளையும், அதி வேக சாலைகளையும் அமைக்கும் அரசாங்கம் நாட்டின் மிக மோசமாகன போசாக்கின்மையை ஒழிக்க எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்காதது மிகவும் வருந்தத்தக்கது.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
உலக பட்டினிச் சுட்டெண் தரவுகளின் படி 2010-2012 காலப்பகுதியில் மொத்த சனத்தொகையில் போசாக்கின்மையால் வாடும் மக்களின் வீதம் வங்காளதேசத்தில் 16.8 வீதமாகவும், இந்தியாவில் 17.5 ஆகவும், நேபாளத்தில் 18 வீதமாகவும், பாகிஸ்தானில் 19.9 வீதமாகவும், செனகலில் 20.5 வீதமாகவும், மலாவியில் 23.1 வீதமாகவும் காணப்படுகையில் இலங்கையில் இது 24 வீதமாக காணப்படுகின்றது. ஒட்டு மொத்த இலங்கையில் இந்த நிலையென்றால் பாரிய யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கில் போசாக்கின்மை வீதம் எவ்வளவு அதிகரித்திருக்கும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். தென்னாசிய நாடுகளுடன் மட்டுமல்ல சில ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் போசாக்கின்மை மிக அதிகளவில் காணப்படுவது வெட்கக் கேடானது.
எமது குழந்தைகளுக்கான, இளைஞர்களுக்கான நாட்டை கட்டியெழுப்புவதாக உரத்து கூக்குரலிடும் அரசாங்கம் தனது நாட்டில் போசாக்கின்மை மிகவும் அதிகமாய் இருப்பதையிட்டு வெட்கித் தலைகுனி வேண்டும்.
இது மாத்திரமல்ல யுனிசெவ் தரவுகளின் படி இலங்கையில் ஐந்தில் ஒரு குழந்தை நிறை குறைந்த குழந்தையாக பிறக்கின்றது. 6 – 11 மாத சிசுக்களில் 58 வீதமானவையும் 12- 23 மாத சிசுக்களில் 38 வீதமானவையும் வெண்குருதிச் சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த இலங்கையில் இதுதான் நிலையையென்றால் யுத்தம் நடந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
கிராமத்தவன் ஒருவனின் வரவு செலவுத்திட்டம் எப்படியிருக்கின்றது என்ற இறுமாப்பை வரவு செலவு திட்ட முடிவில் ஜனாதிபதி வெளியிட்டார். ஆனால் கிராமத்துக் குழந்தைகளும், கிராமத்து இளைஞர்களும், கிராமப் புற சனங்களும் எவ்வளவு வறுமைக்குள் வாழ்கின்றார்கள் என்பதை நான் கூறிய புள்ளி விபரங்கள் தெளிவுப்படுத்தியிருக்கும். ஒரு கிராமத்தவனின் வரவு செலவுத்திட்டம் கிராமத்து மக்களுக்கு எதிராக இருப்பதையும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தான் பார்க்கின்றோம். எனவேதான் ஆரம்பத்திலேயே இது மக்களை ஏமாற்றுவதற்கும், முட்டாளாக்குவதற்குமான வரவு செலவு திட்டமென நான் கூறினேன்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு ஊடக சுதந்திரம் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் நல்லாட்சி நிலவுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் கூறிச் சென்றுள்ளார். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளமையும், அவசர கால சட்டத்திலுள்ள சரத்துக்கள் சேர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டமானது இன்னும் இறுக்கமாக மாற்றப்பட்டுள்ளதுடன் இதனால் தமிழ் மக்களே அதிகம் பாதிகப்பட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை காணாமல் தேடித்திரிந்த ஜெயக்குமாரி என்ற தாயாரும் அவரது மகளும் இந்த கொடிய சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்பாக யுத்ததில் பாதிக்கப்பட்டு தனது மகளை செல்வீச்சுக்கு பலி கொடுத்த கிருஸ்ணராஜா சின்னத்தம்பி என்பவர் பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு சாட்சியமளிக்க முற்பட்டதனாலேயே இவர் கைது செய்யப்பட்டார் என்பதுடன் இவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் உள்ளேயே கைது செய்யப்பட்டுமுள்ளார்.
இதனை விட யாழ்ப்பாணத்தில் தமிழ் பத்திரிகையாளர்கள் பல்வேறுப்பட்ட புலனாய்வாளர்களால் அழைக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவது இங்கு ஒரு தொடர் நிகழ்ச்சியாக மாற்றபட்டுள்ளது. இதனைத் தான் ஜனாதிபதி அவர்கள் ஊடகத்துறைக்கு கொடுத்த சுந்திரமாக அல்லது ஜனநாயக உரிமையாக கருதுகின்றார் போலுள்ளது.
கௌரவ சபாநாயகர் அவர்களே!
வடக்கும் – கிழக்கும் சேர்ந்து தான் இலங்கை. இங்குள்ளோர் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணக்கரு இந்த அரசுக்கு இருந்திருக்குமாக இருந்தால், இவர்களுடடைய திட்டமிடல்கள் வேறு விதமாக அமைந்திருக்கும்.
ஆனால் வடக்கு-கிழக்கை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்து மக்களை மௌனிகளாக்கி, அங்குள்ள பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதில்தான் அரசாங்கம் அக்கறையாக இருக்கின்றது. அரசுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீகுவான்யூ அவர்கள் லொஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட் அவர்கள் எழுதிய “லீ குவான்யூ உடனான உரையாடல்கள்” என்ற நூலுக்கு இலங்கை தொடர்பான சில கருத்துக்களை கூறி இருந்தார்.
“சிங்களவர்கள் இலங்கையில் இருந்த காலம் முதல் தமிழர்களும் இலங்கையில் இருந்து வருகின்றனர். இருப்பினும் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் அங்கு இல்லை. இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரையில் மகிழ்ச்சிகரமான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த குறிப்பிட்டு வருகின்றார். இதனையே ஏற்கவும், நம்பவும் வேண்டுமென்றும் அவர் எதிர்பார்க்கின்றார்.
ஈழத்தமிழர் அடங்கிப் போகவும் மாட்டார்கள். மண்டியிடவும் மாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்திருந்தாலும், ஈழத் தமிழர்களை இவர்களால் வென்றெடுக்க முடியாது. அதுவும் யாழ்ப்பாணத் தமிழர்களை நிச்சயம் ஒரு போதும் வெல்லவே முடியாது. அதனால் தான் தமிழர்களை எல்லா வழிகளிலும் நசுக்கி ஒடுக்க முனைகின்றார்கள்.
சிங்களவர்கள் முன்பும் இப்படித்தான் செய்தார்கள் இதுதான் மிகப்பெரும் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. இப்போதும் இதனையே செய்ய முயற்சிக்கின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்தமான தமிழ் இனத்தை அழிக்கும் அவர்களின் எண்ணம் ஈடேறாது.”
இதனை நான் கூறவில்லை சிங்கப்பூரின் தந்தை, சிங்கப்பூரை உருவாக்கிய சிற்பி, நான்கு பாசைகள் பேசக் கூடிய நாட்டில் எவ்வாறு இன ஒற்றுமையை உருவாக்குவது என்பதற்கு சிங்கப்பூருக்கு வழிகாட்டி, சிறிய நாடாக இருந்தாலும், பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும் சிங்கபபூரின் முன்னாள் பிரதமர் கூறுகின்றார்.
கௌரவ சாபாநாயகர் அவர்களே!
அரசாங்கத்துடைய சிந்தனையில் மாற்றம் வேண்டும். அரசாங்கம் அடக்குமுறைகளை கைவிட வேண்டும். தமிழ் மக்களை கௌரவமாக நடத்தக் கூடிய விதத்தில் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் வேண்டும். தமிழர்களும் இந்நாட்டின் குடி மக்கள். அவர்களுக்கும் பகிரப்பட்ட அடிப்படையிலான இறையாண்மை உண்டு. அவர்களுக்கு சுய நிர்ணய உரிமையுண்டு, சிங்கள மக்களுடன் சரிசமனாக அரசியல், பொருளாதார விடயங்களை செயற்படுத்தும் உரிமை உண்டு என்ற விடயங்களை முதலில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் பிரதமர் லீகுவான்யூ சொன்னது போல் மகிழ்ச்சியான இலங்கையை பார்க்க முடியாது. எமது ஜனாதிபதி கூறுவது போன்று ஆசியாவின் அதிசயமாகவும் இதனை மாற்ற முடியாது.
நெல்சிப் திட்டத்தின் கீழ் 3500 மில்லியன் ரூபாய்களை உலக வங்கி ஒதுக்கியிருந்தது. இதில் பல மில்லியன் ரூபாய்கள் ஊழல்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரெஜிலாதரன் என்ற பொறியியலாளர் ஆளுநரால் இடை நிறுத்தப்பட்டுள்ளார். இப்பொழுதும் வட மாகாண சபை உள்@ராட்சி சபையின் கீழ் வேலை செய்யும் உள்@ராட்சி ஆணையாளர், உள்@ராட்சி உதவி ஆணையாளர் மற்றும் வட மாகாணசபையினுடைய முதன்மை செயலாளர் ஆகியோரும் ஒன்றில் இடமாற்றம் செய்யபட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு விசாரணைகள் சரியான முறையில் நடைபெற வேண்டும். ஆளுநரும் முதலமைச்சரும் இதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இவர்கள் தொடர்ந்தும் அதே பதவிகளில் இருப்பதால் சாட்சிகள் மிரட்டப்படுவதுடன், ஆவனங்களும் மறைக்கப்படலாம்.
கௌரவ சாபாநாயகர் அவர்களே!
இந்த அரசாங்கத்திடைய ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழர்கள் தனித்து வாழ்வதையே ஊக்குவிப்பதாக உள்ளது. வடக்கு மாகாணத்திற்கு பிரத்தியேக பாஸ் நடைமுறை, வடக்கு மாகாணசபைக்கான அதிகாரங்களை மறுத்தல், வடக்கில் பொருளாதார நடவடிக்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தாமை, இராணுவ ஆக்கிரமிப்புகள், படையினரின் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இவையாவும் தமிழ் மக்களை தனித்து வாழத்தூண்டும் அரசின் அடக்கு முறைகளை வெளிப்படுத்துகின்றது. எனவே அரசாங்கம் தமிழ் மக்கள் மீது குற்றம் சாட்டுவதை தவிர்த்து விட்டு தன்னைத் தானே திருத்திக் கொள்ள வேண்டும்.