என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட மையத் திட்டம் மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது மீது தெளிவான பதில்கள் கிடைக்கா விட்டால் அந்தத் திட்டம் குறித்துக் கவனம் செலுத்தப் போவதாக பிகேஆர் மருட்டியுள்ளது.
அந்தத் திட்டம் “ஒரே குழப்பத்தில்” மூழ்கியிருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வருணித்துள்ளது.
நெகிரி செம்பிலான் கெமாஸில் 73.64 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கான உள்நாட்டுத் தேவையை குறைப்பது அந்தத் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.
2008ம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் இடையில் அந்த தேசிய விலங்குக் கூடம் 5,742 மாடுகளை மட்டுமே அறுக்க முடிந்திருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்ட அறிக்கை கூறியது.
ஆனால் 2010ம் ஆண்டுக்கு மட்டும் வைக்கப்பட்டிருந்த இலக்கு 8,000 மாடுகள் என அது குறிப்பிட்டது.
பிகேஆர்-ன் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லியும் அதன் மகளிர் தலைவி சுராய்டா கமாருதினும் வெளியிட்ட அறிக்கையில் அந்தத் திட்டத்தில் ஒர் அமைச்சர், அமைச்சரது துணைவியார், பிள்ளைகள் ஆகியோருக்கும் பங்கு இருப்பதாக கூறப்படுவது மீதும் கேள்வி எழுப்பினர்.
அந்தத் திட்டம் அமலாக்கப்பட்ட காலத்தில் விவசாய, விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சுக்குப் பொறுப்பேற்றிருந்த நடப்புத் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் அல்லது குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் முன் வந்து அந்தக் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கா விட்டால் பிகேஆர் கெமாஸில் உள்ள தேசிய விலங்குக் கூடத்துக்கு சென்று அந்த விவகாரத்தை அம்பலப்படுத்துவதற்கு நிருபர்களை சந்திக்கப் போவதாக ராபிஸி சொன்னார்.