முழு நாட்டின் முன் தோலுரிக்கப்பட்டு நிர்வாணமாக நிற்கும் தொண்டமானும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும்

thondamanகடந்த 30ம் திகதி பீபீசீ தமிழ் சேவை கொஸ்லந்தை மீரியவத்தை சம்பவம் தொடர்பான நிகழ்ச்சியில், 2005ம் ஆண்டிலும், 2011 ம் ஆண்டிலும் ஏறக்குறைய பத்து வருடங்களாக மீரியாவத்தை பகுதியில் மண்சரிவு ஆபத்துக்குள்ளான பகுதியாக இருந்திருக்கிறது என்பதை பெருந்தோட்ட அமைச்சர் முதல்….

இந்த தோட்ட சாதாரண மக்கள் வரை தெரிந்திருந்து வைத்திருக்கும் போது ஏன் அது குறித்து நடடிவடிக்கை எடுக்கவில்லை என தொண்டமானிடம் கேட்ட போது, இந்த மக்களின் ஏகபிரதிநிதி என பெருமை பாராட்டிக் கொள்ளும் தொண்டமான் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் அதை தனது கவனத்திற்கு எவரும் கொண்டு வரவில்லை என்றும், ஊவா  மாகாணத்தை பிரநிதித்துவப்படுத்தும் செந்தில் தொண்டமானுக்கும் இது தெரியாது எனவும் இதனை ஜோதிடம் பார்த்தா தெரிந்து கொள்வது என எகத்தாளமாக பதில் சொல்லியிருந்தார்.

மக்களை பாதிக்கும் இவ்வளவு பாரதூரமான பிரச்சினையில் தொண்டமான் எவ்வளவு அக்கறையுடன் இருந்திருக்கிறார் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இதற்கிடையில் நேற்று பாராளுமற்த்தில் போசிய யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மாவை சேனதிராஜா 200 வருட லயன் வாழ்க்கைக்கு முடிவு கட்டவேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.

கொஸ்லந்தைக்கு சென்ற பா.உ. சிறிதரன் காலாதிகாலமாக கொத்தடிமைகளாகவே வாழுகின்ற இந்த மக்களுக்கு லயன் வாழ்க்கை மாறி அவர்களுக்கு நிரந்தரமானதும் பாதுகாப்பானதுமான வீட்டு வசதிகளுடனான வாழ்வு ஏற்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இன்று மண்சரிவினால் ஏற்பட்ட ஏழை மக்களின் மரணம் தம் எதிர்கால சந்ததிக்கான தியாகமான கருதப்பட்டு அவாகளின் நினைவுகள் சுமந்து மலையக சொந்தங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தமிழ் பேசம் அரசியல் கட்சிகளை சேர்ந்த்தவர்களும் துரிதமாக ஒரு சுபீட்சமான மலையக வாழ்வு நோக்கி சிந்தித்து செயல்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டி மலையக மக்களின் வாழ்க்கையை கொத்தடிமை வாழ்க்கையோடு ஒப்பிட்டிருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பாக இதுவரை வாய்திறக்காமல் இருந்த செந்தில் தொண்டமான், சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக வாய் திறந்து பேசி “எமது மக்கள் உரிமையற்றவர்கள் அல்ல. அனைத்து உரிமைகளும் எமது மக்களுக்கு உண்டு” என கூறி எல்லோரையும் முட்டாளாக்க முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் கொஸ்லந்தை மீரியாபெத்தை பேரனர்த்தம் நடந்து ஏழு நாட்களுக்கு பின்னரும் எத்தனை பேர் இறந்தார்கள், குறிப்பிட்ட தோட்டத்தில் எத்தனை குடும்பங்கள் இருந்தன என்பது குறித்துக் கூட நிச்சயமான புள்ளிவிபரங்களை அரசாங்கத்தால் கொடுக்கமுடியவில்லை.

ஆரம்பத்தில் காணாமற் போனவர்கள் 300க்கும் அதிகம் என்று சொல்லப்பட்டு பின்னர் 197 ஆகி தற்போது சுமார் 39 என்று சொல்லப்படுகிறது.

பெற்றாரை இழந்த 75 பிள்ளைகளின் முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாக மிகப் பெருந்தன்மையுடன் சொன்ன அரசாங்கம் தற்போது தாய் தந்தை இருவரையும் இழந்த பிள்ளைகள் மூன்று பேர் மட்டுமே என்று கூறுகிறது.

இந்த பின்னணியில் இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனமான சிரச (சக்தி)  நிறுவனம் இந் அனர்த்தம் தொடர்பாக விசேடமாக நடத்திய கலந்துரையாடலில் ஏழு நாட்களுக்கு பின்னரும் அனர்த்த நிவாரண அமைச்சினாலும், அமைச்சசோடு தொடர்பான திணைக்களங்களாலும் அனர்த்தம் தொடர்பான சரியான புள்ளிவிபரங்களை கொடுக்க முடியாமல் இருப்பது ஒரு பாரதூரமான விடயம் என்பதை சுட்டிக்காட்டியதோடு, அரசு இயந்திரம் இவ்வாளவு மோசமான முறையில் செயல்படுவதை நம்பவே முடியவில்லை என்று அங்கலாய்ப்பு தெரிவித்தார்கள்.

அத்தோடு இந்த நாட்டின் பெருளாதாரத்திற்கு இன்றுவரை பாரிய அளவில் பங்களிப்பு செய்யும் இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் தொண்டமானும், ஊவா தோட்டத் தொழிலாளரின் தலைவன் என பெருமை பாராட்டும் செந்தில் தொண்டமானும் மக்களிடமிருந்து கோடிக்கணக்கில் சந்தாப்பணம் வாங்கும் இ.தொகாவும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தமக்கு புரியவில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்தார்கள்.

அத்துடன் இந்த மக்களை இந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தாலும் இந்த மக்களை அவர்களுக்கு வேண்டிய வசதி செய்து கொடுத்து வெளியேற்றாதது ஏன் என்ற கேள்வியையும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் திரும்பத் திரும்ப ஆதங்கத்துடன் எழுப்பினார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்கள்.

இவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக இருந்தாலும் அவர்கள் முழுமையான பிரஜைகளாக மதிக்கப்படுவதில்லை என்பதும் அரசு சேவைகள் பெருந்தோட்ட மக்களை சென்றடைவதில்லை என்பதும் இவர்களுக்கு தெரியவில்லை.

இந்த மக்கள் பெருந்தோட்டத்திற்கு வெளியில் இருக்கும் மக்களை போன்று பிரதேச செயலாளார் மற்றும் கிராம சேவகர்களின் நேரடி கண்காணிப்பில் வருவதில்லை என்பதை இவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை.

இது பற்றி இதுவரை யாரும், விசேடமான இந்த மக்களின் தலைவர் என பெருமை பாராட்டும் தொண்டமானோ அவரின் இ.தொ.காவோ இந்த நாட்டு மக்களுக்கு சொன்னதுமில்லை .அரசின் கவனத்திற்கு கொண்டு வந்ததுமில்லை.

இவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதே கிடையாது. பாராளுமன்றத்தில் பேசுவதில் பிரயோசனம் இல்லை என்பதுவே தொண்டமானின் கொள்கையாக இருந்திருக்கிறது.

அப்போது எப்படி இந்த மக்களின் பிரச்சினைகள் அரசுக்கும் தாங்களே பெருந்தோட்ட மக்களின் ஏகபிரநிதிகள் என இதொகாவும் தொண்டமானும் எப்போதும் சொல்லி வருகிறார்கள்.

ஆனால் ஒரு பிரஜைக்கு கிடைக்க வேண்டிய ஆகக் குறைந்த மரியாதையும் மதிப்பும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதே உண்மையாக இருந்தாலும் இப்போதுதான் அது இந்த நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.

75 வருடங்களாக இதொகா இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறி அண்மையில் வைரவிழாவும் கொண்டாடியது.

இந்த நிலையில் ஜனாதிபதி அழைக்காமலேயே ஜனதிபதி மாளிகைக்கு மற்றவர்களை முந்திக்கொண்டு சென்;று நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்தார்கள்.

முகவரியே இல்லாத மக்கள் பிரதிநிதிகளாக அங்கு சென்ற தொண்டமானும், முத்து சிவலிங்கமும் அவரது அடிவருடிகளான இதொகாவின் உறுப்பினர்களும் தமது மக்களுக்கு (தமக்கு)  எந்த பிரச்சினையுமே இல்லை என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்ததார்கள்.

• ஆனால் அந்த மக்களுக்கு முகவரியே இல்லை என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
• இந்த மக்களுக்கு வீட்டுரிமையும், நிலஉரிமையும் இல்லை என்ற நிதர்சனமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
• இவர்கள் இதுவரை பிரஜைகள் எனக் கூற்பட்டாலும் பிரஜைகளின் உரிமைகளை இவர்கள் அனுபவிப்பதில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
• இந்த மக்கள் கொத்தடிமை நிலைiயில் இருந்து முழுவதுமாக வெளிவரவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
• அரசு இவர்களை முழுப்பிரஜைகளாக மதிக்கவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
• இந்தநாட்டுக்கும் மண்ணுக்கும் தமது முழு உழைப்பையும் அர்பணித்தாலும் அரசு சேவைகள் இந்த மக்களை சென்றடைவது இல்லை என்பது முழு உலகிற்கும் தெரிந்துவிட்டது.
• இந்த மக்கள் அரச இயந்திரத்தின் புள்ளிவிபரங்களில் கூட முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இந்த இலட்சணத்தில் இதொகாவே பெருந்தோட்ட மக்களின் ஏக பிரதிநிதி என்று தொண்டாமான் இப்போதும் ஏகபோகம் கொண்டாடுகிறார். எமது மக்களுக்கு எல்லா உரிமையும் உண்டு செந்தில் தொண்டமான் பெருமை பாராட்டுகிறார்.

இது மட்டுமல்ல பெருந்தோட்ட மக்கள் இந்த நாட்டின் முழுப்பிரஜைகளாக இல்லாததை உறுதிப்படுத்தும் முகமாக இந்த மக்களின் சேமநலனை கவனிப்பதற்கென அரசினால் பிரத்தியேகமாக பெருந்தோட்ட வீடமைப்பு மானிட அபிவிருத்தி நிதியம் அல்லது டிரஸ்ட் (Trust ) நிறுவனம் அமைக்கப்பட்டது.

இந்த நிறுவனம் முழுக்க முழுக்க தொண்டமானினதும் இதொகாவினதும் கட்டுப்பாடடிலேயே உள்ளது. இந்த நிறுவனமே பெருந்தோட்ட மக்களின் வீடமைப்பு சேமநலன் நடடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளது.

சட்டத்தரணி மாரிமுத்து என்பவர் இதன் தலைவராக உள்ளார். தோட்ட மக்களின் சேமநலனுக்கு தமது நிறுவனமே பொறுப்பு என கூறிக் கொள்வதில் பெருமை கொள்பவர் இவர்.

ஆனால் இந்த டிரஸ்ட நிர்வனமும் அதன் தலைவர் மாரிமுத்துவும் மீரியாவத்தையில் எத்தனை மக்கள் இருந்தார்கள் எத்தனை மக்கள் இறந்தார்கள் என்பதையோ அல்லது 2005 முதலே பலமுறை இந்த மக்களை வெளியேறுமாறு கோரப்பட்டார்கள் என்பது பற்றியோ வாயே திற்கவில்லை.

பெருந்தோட்ட மக்கள் எவ்வளவு மோசமான நிர்கதியான நிலையில் வாழ்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்ட பின்னணியில் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டிருக்கும் தொண்டமானும் இதொகாவும் தோலுரிக்கப்பட்ட நிலையில், முழுநாட்டு மக்கள் முன்னிலையிலும் வாக்களித்த மக்கள் முன்னிலையிலும் நிர்வாண நிலையில் நிற்கிறார்கள் என்பதே என்பதே உண்மையாகும்.

இதே வேளையில் தொண்டமானுக்கு போட்டியாக அரசியல் நடத்தும் திகாம்பரம், இராதாகிருஸ்னன் போன்றவர்களும் தொண்டமானின் அடிச்சுவட்டிலேயே அரசியல் நடத்த முயற்சிக்கிறார்கள். அவர்களும் தங்கள் அரசியல் பாதையை மீளாய்வு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.

N.Udayakumar ,
 31 .Mulgampola  Kandy

TAGS: