இலங்கையில் போரின் போதும், போர் முடிவுக்கு வந்த பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் மேற்கொள்ளும் விசாரணைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
இத்தகைய மீறல்கள் குறித்த சாட்சியங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் வழங்கிய கால எல்லை கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவுற்றுள்ளது.
இந்த எழுத்துமூல சாட்சியங்களை ஆராய்ந்து, அடுத்தகட்ட விசாரணைகளின் மூலம் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, மீறல்கள் குறித்த அடிப்படை ஆதாரங்களை முன்வைக்கும், இரண்டாவது கட்டப் பணிக்குள் ஐ.நா. விசாரணைக் குழு நுழைந்திருக்கிறது.
ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் இதுகுறித்து மீண்டும் சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பில் சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தார்.
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை நடத்தும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளின் தூதுவர்கள், ஐ.நாவின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோருடன், இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவரும் இந்த சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, ஐ.நா. விசாரணைகள் பக்கச்சார்பாக முன்னெடுக்கப்படுவதாகவும், சிலதரப்பினருக்கு ஆதரவாக ஐ.நாவின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், போலியான சாட்சியங்களைச் சமர்ப்பிக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, ஐ.நா. விசாரணைக்குழு எவ்வாறு செயற்படுகிறதென்ற கேள்வியையும் அவர் எழுப்பத் தவறவில்லை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ.நா. மனிதஉரிமை ஆணயாளர் பணியகத்தை விசாரிக்கக் கோரும் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஜெனீவாவிலும், பின்னர் பல்வேறு அரங்குகளிலும் இலங்கை அரசாங்கம் அதனை மிகவும் வெளிப்படையாகவே கூறிவிட்டது.
கடந்த வாரம் நடந்த சந்திப்பின் போது, அமைச்சர் பீரிஸ் அதனையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஐ.நா. விசாரணையை நிராகரித்து விட்டாலும், அது எப்படி, எங்கே நடக்கிறது என்று உரிமையோடு கேள்வி எழுப்பியிருக்கிறார் அமைச்சர் பீரிஸ்.
இது ஐ.நா. மீது இலங்கை கொண்டுள்ள உரிமையின் அடிப்படையிலானது என்று கூறுவதை விட, ஐ.நா. விசாரணையை நம்பகத்தன்மையற்றது என்று காட்டும் முயற்சியாகவே கருத வேண்டும்.
தாம் நிராகரித்து விட்ட ஒரு சர்வதேச விசாரணை விவகாரத்துக்குள் அரசாங்கம் திரும்பத் திரும்ப மூக்கை நுழைக்க முனைகிறது என்பது அமைச்சர் பீரிஸின் இந்தக் கருத்துகளிலிருந்து புரிந்துகொள்ளத்தக்கதாக உள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா. விசாரணைகள் தீவிரம் பெற்றிருப்பதை இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகவே இருக்கிறது.
இந்த விசாரணை அறிக்கை இலங்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது எவரையேனும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கோ வழிவகுக்கும் என்று அஞ்சுகின்ற சூழலும், அதற்கான வாய்ப்புகளும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், இந்த விசாரணை அறிக்கை சர்வதேச அளவில் ஒரு முக்கிய ஆவணமாக இருக்கப் போகிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும், அதற்கு நியாயம் வழங்கக் கோரும் ஒரு அறிக்கையாக அமையப் போகிறது. அதில் அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் குற்றம்சாட்டப்படலாம். ஏனென்றால், இருதரப்பும்தான் போரில் ஈடுபட்டவர்கள்.
அரசாங்கம் தமது படைகள் எந்தப் போர்க்குற்றங்களிலும் ஈடுபடவில்லை என்றே கூறிவருகிறது. என்றாலும், அண்மைக்காலத்தில் அதுபற்றி விசாரிக்கத் தயாரென்று உதட்டளவில் மட்டும் கூறியிருக்கிறது. அதற்கான முயற்சிகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.
அதேவேளை, விடுதலைப் புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அதையும்கூட, சர்வதேச குழு விசாரிப்பதை அரசாங்கம் ஏற்கவில்லை.
இலங்கை அரசின் எதிர்ப்புகளையும் மீறி, இலங்கைக்கு ஆதரவான நாடுகளின் தடைகளையும் மீறி இப்போது சர்வதேச விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தச் சூழலில்தான் அரசாங்கம், அந்த விசாரணைகளையும், அதில் சாட்சியமளிப்போரையும், குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளது.
ஐ.நா. விசாரணைகளை ஏற்கவும் முடியாது, அதற்கு ஒத்துழைக்கவும் முடியாது என்று கூறிய அரசாங்கம், ஒருகட்டத்தில் இந்த விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டவும் தயங்கவில்லை.
பின்னர், ஐ.நா. விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதென்று அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தது. இருந்தாலும், பல்வேறு வழிமுறைகளின் ஊடாக, சாட்சியமளிக்கும் முயற்சிகள் குழப்பப்பட்டன.
சாட்சியமளிப்பதற்கான சில படிவங்களை வைத்திருந்தாரென்று கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் போலியான சாட்சியங்களைத் திரட்டுவதற்கு முற்பட்டாரென்று குற்றம்சாட்டி, குற்றப் புலனாய்வுத் துறையினரின் தடுப்புக்காவலில் இருந்து வருகிறார்.
இதனை முன்வைத்தே, போலியான சாட்சியங்கள் ஐ.நாவுக்கு சமர்ப்பிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார் அமைச்சர் பீரிஸ்.
ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதித்திருந்தால், இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. இப்போது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்வது போல அதுவும், பகிரங்கமாக சாட்சியங்களைப் பெற்றிருக்கும். ஆனால் அரசாங்கம் அதற்கு இடமளிக்கவில்லை.
இத்தகைய சூழலில், ஐ.நாவுக்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, ஒருவரைக் கைது செய்தது சர்வதேச அளவில் விசனங்களைத் தோற்றுவித்துள்ளது. உண்மையில் ஐ.நா. அத்தகையதொரு சாட்சியப் படிவத்தை வெளியிடவில்லை. அது உள்ளூரில் தயாரிக்கப்பட்டது.
போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவான மக்களுக்கு அதுபற்றிச் சாட்சி சொல்ல விரும்பினாலும், அதற்கான வழிமுறைகள் தெரியாது அல்லது அதற்கான போதிய கல்வியறிவு இல்லை. அவ்வாறானவர்களின் சாட்சியங்களைத் திரட்டவே இதுபோன்ற படிவங்கள் உள்ளூரில் அச்சிடப்பட்டிருக்கலாம்.
இலங்கை அரசாங்கம் இதனை ஒரு குற்றச்செயலாகப் பார்க்கிறது. ஆனால், ஐ.நாவோ அமெரிக்காவோ இதனை ஐ.நாவுக்கு ஒத்துழைக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர், இதுகுறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள குறிப்பு ஒன்றில், ஐ.நாவுக்கு ஒத்துழைக்க முற்படுவோரை மௌனமாக்க முற்படுவது, ஐ.நா. மீதான ஒரு தாக்குதல் என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டுமென்று எச்சரிக்கும் பாணியில் கூறியிருக்கிறார்.
ஒருபக்கத்தில், ஐ.நா. விசாரணைகளை நடத்துவதாகவும், இரகசியமான முறை யில் சாட்சியங்களை அளிப்பதற்கான காலஎல்லையை நீடித்துள்ளதாகவும், அரசாங்கம் குற்றச்சாட்டுகளைக் கூறுகிறது.
மறுபக்கத்தில் ஐ.நாவுடன் ஒத்துழைப்போரை மௌனமாக்க அரசாங்கம் முனைவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும் ஆதரித்திருக்கிறார்.
இத்தகைய கட்டத்தில், போர்க்குற்றங்கள் இடம்பெற்றதா என்று விசாரிக்க காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிறப்பித்த உத்தரவு எந்தளவுக்கு நேர்மையானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஏனென்றால், ஐ.நாவுக்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்பதற்காகவே, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக போர்க்குற்றங்கள் குறித்து எத்தனை பேர் துணிச்சலுடன் சாட்சியமளிக்க முன்வருவார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததோடு அரசாங்கம் நின்று கொண்டது. அதனை நிறைவேற்றி, செயற்படுத்த எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இத்தகைய நிலையில், அரசாங்கம் தனது உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளையும் வலுப்படுத்தாமல், சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளையும் பலவீனப்படுத்த முற்பட்டு வருகிறது.
இது, சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் கெட்ட பெயரைத்தான் தேடிக் கொடுக்குமே தவிர, அதனைக் காப்பாற்ற உதவப் போவதில்லை.
– சத்ரியன்