தமிழர்களுக்குத் தீர்வு கிட்ட அரசியல் யாப்பின் ஒற்றையாட்சி விடயம் நீக்கப்படவேண்டும்

cm-visit-channaiதமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமானால் முதலில் இலங்கை அரசியல் யாப்பின் அடிப்படையாக இருக்கும் ஒற்றையாட்சி விடயம் மாற்றப்பட்டு தமிழ் மக்களின் தனித்துவத்தையும், சுயநிர்ணய உரிமையையும் உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்கான தார்மீகக் கடப்பாடு இந்திய மத்திய அரசுக்கு இருப்பதாகவும் சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் இன்றைய தினம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா கல்லூரியின் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த உரையில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,…

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சார்பாக 1987 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது.

இதன்படி அங்கு ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை.

அனைத்து அதிகாரங்களும் இலங்கை மத்திய அரசின் கையிலேயே உள்ளது. இதனால் வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக எங்களால் பாடுபட முடியவில்லை.

இந்தப் பிரதேசம் தொடர்ந்தும் முழுமையாக இராணுவ கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எங்களை சிங்கள அரசு செயற்பட விடாமல் தடுத்து வருகிறது. இதுதான் அவர்களின் முக்கிய குறிக்கோளாகவும் உள்ளது.

அதிகாரமில்லாத வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக ஏன் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள். தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு உள்ளது. இது தமிழ் பேசும் மக்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர் பகுதியில் சிங்களவர் 5 சதவீதனோரே இருந்தனர். இப்போது அவர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக அதிகரித்து விட்டது.

தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் 13வது திருத்தச் சட்டமானது மேலும் திருத்தியமைக்கப்பட்டாலும் அது எமக்கு நன்மை பயக்காது. முதலில் அரசியல் யாப்பின் அடிப்படை ஒற்றையாட்சியில் இருந்து மாற்றப்பட வேண்டும். எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பிலான கோரிக்கையை விடுப்பதற்கும், இந்தத் திட்டத்தை முன்மொழிவதற்கும் இந்திய அரசாங்ககத்திற்குத் தார்மீக உரித்து உள்ளது என்பதைக்கூறி வைக்கின்றேன்.

இலங்கை அரசு மனமுவந்து அதிகாரங்களைப் பகிர முன்வந்தால் தான் மாகாணங்கள் தம் மக்கள் நலனுக்காகப் பாடுபடலாம்.

வடமாகாண இனப்பரம்பலையே மாற்றியமைத்துப் பெரும்பான்மையினரை உள்நுழைத்து, கிழக்கு மாகாணம்போல பெரும்பான்மையினரை வடக்கிலும் பெருவாரியாகக் குடியிருத்த இராணுவம் மூலமாக நடவடிக்கை எடுத்து வரும் இலங்கை அரசாங்கம் மனமுவந்து எமக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அது தான் தற்போதைய நிலை.

சிங்கள அரசு எங்களை வடக்கு மாகாணத்தில் செயற்பட விடாமல் தடுக்கிறது. அதுமட்டுமின்றி அதிகாரத்தை தம்வசப்படுத்தி தொடர்ச்சியாக எம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கவே அது முயன்று வருகிறது என்றும் விக்னேஷ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக கிடைப்பதில்லை! சென்னையில் விக்னேஸ்வரன் பேட்டி!

இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வடக்கு மாகாணத்தில் மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கப்படும் நிதி எங்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை.

முதலமைச்சர் நிதி மற்ற மாகாணங்களுக்கு வழங்கப்படுகிறது. வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படவில்லை. நாங்கள் வளர்ச்சி அடைந்துவிடக் கூடாது என்பதையே தற்போதைய இலங்கை அரசு விரும்புகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் ஒப்புதலுடன் தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நியமிக்கப்படவில்லை.

போருக்குப் பிறகு தமிழகர்களுக்கு நிறைய பிரத்யேக தேவைகள் உள்ளன. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உலகிற்கு காட்டுகிறது. ஆனால் இந்த திட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.

ஒற்றை ஆட்சியின் கீழ் எங்களுக்கு தீர்வு கிடைக்காது. 13வது திருத்தத் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றினால் தமிழர்களுக்கு ஓரளவாவது நன்மை கிடைக்கும். ஆனால், 13வது திருத்தச் சட்டம் அரசியல் தீர்வாகாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தனது சொந்த நலனை கருத்தில்கொண்டு செயல்படுகிறது என்றார்.

TAGS: