இந்தியா இன்றி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது: விக்னேஸ்வரன்

vikneshwaran_002இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வுகாண முடியும் என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 7–ந் திகதி சென்னைக்கு விஜயம் செய்த விக்னேஸ்வரன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இன்று காலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் பேரும், ஒரு லட்சம் இளம் விதவைகளும், பெற்றோரை இழந்த எண்ணற்ற குழந்தைகளும் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர்.

இளைஞர்கள், பெண்கள், அன்றாடம் குடும்பம் நடத்த பணவசதி இன்றி வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் கிடைக்க வில்லை. இந்தியா முன்வந்து வீடு கட்டித்தரும் திட்டத்தில் தகுதியானவர்களுக்கு வீடு கிடைப்பதில்லை.

அரசியல் செல்வாக்கு, ஆள்பலம் உள்ளவர்களுக்கு வீடு கிடைக்கிறது. இலங்கை அரசு எங்களை எல்லா விதத்திலும் இயங்க விடாமல் தடுக்கிறது. அதிகாரம் இல்லாமல் தான் நான் முதல் – மந்திரியாக செயல்படுகிறேன்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டால் தான் நிரந்தர தீர்வு காண முடியும். இந்தியா இன்றி இப்பிரச்சினையில் தீர்வு காண முடியாது.

1987ம் ஆண்டு ராஜூவ் ஜெயவர்த்தனே கொண்டு வந்த 13வது திருத்த சட்டத்தத்தை நிறைவேற்ற இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

சமீபத்தில் ராஜபக்சவிடம் 13வது சட்ட திருத்தத்தை இலங்கையில் நடைமுறையில் பிரதமர் மோடி கூறியது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது.

இலங்கை அரசுக்கு பல்வேறு தரப்பினரும் நெருக்கடி கொடுக்கும் போது தான் அவர்கள் சிலவற்றை நிறைவேற்றுகிறார்கள் இல்லையென்றால் எதையும் அவர்கள் கண்ட கொள்வதில்லை.

ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து ஒட்டு மொத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்திய அரசும் இலங்கையுடன் பேசி வருகிறது. சமீபத்தில் என்னை மீனவ குடும்பத்தினரும் சந்தித்து பேசினார்கள். அவர்களிடம் நாங்கள் கொடுத்த உறுதி மொழி என்னவென்றால் 1976–ம் ஆண்டில் இருந்து இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றும், சட்டத்தில் அவ்வாறு கூறப்பட்டிருந்தாலும் அத்தகைய கடுமையான எந்த வித நடவடிக்கையிலும் இலங்கை அரசு ஈடுபடவில்லை என்று கூறினேன்.

இதில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மரண தண்டனைக்கு பதில் நன்மைகளே கிடைக்க கூடும். இந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அதிகமாக இதில் விமர்சிக்க முடியாது என்கிறேன்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களையும் மத்திய சிறைக்கு மாற்ற முடியுமா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது.

இலங்கை ஜனாதிபதி சொல்வது எதையும் உடனே செயல்படுத்துவது கிடையாது. 2009ம் ஆண்டு இலங்கையில் போர் முடிந்ததும் வட மாகாண தேர்தலை நடத்ததப் போவதாக கூறினார். ஆனால் அப்போது நடத்தவில்லை.

இந்த விஷயத்தில் இந்தியா தலையிட்டு வலியுறுத்திய பிறகு தான் 2013ம் ஆண்டு எங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. எனவே பிரதமர் மோடி அரசு இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகண்டிட உதவ முடியும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் எங்கள் வளர்ச்சி அடைந்து விடக்கூடாது என ஜனாதிபதி கருதுகிறார். இதற்காக சிங்கள குடியோற்றமும் அதிகம் நடைபெறுகிறது என்றார்.

TAGS: