புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கை திரும்ப வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

  • சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். உடன், (இடமிருந்து) மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்திய பொதுச்செயலர் வி.சுரேஷ், இலங்கை வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், இலங்கை மக்களவை உறுப்பினர்கள் மாவே சேனாதிராஜா, சுமந்திரன்.
  • சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். உடன், (இடமிருந்து) மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்திய பொதுச்செயலர் வி.சுரேஷ், இலங்கை வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியலிங்கம், இலங்கை மக்களவை உறுப்பினர்கள் மாவே சேனாதிராஜா, சுமந்திரன்.

அகதிகளாகவும், புலம்பெயர்ந்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கைக்குத் திரும்பி வர வேண்டும் என்று  வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

வடக்கு மாகாணப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனைத் தடுத்த நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருக்கிறது. எனவே,  தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் அகதிகளாகவும், புலம்பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் இந்திய அரசாங்கமே கவனித்து வருகிறது. அகதிகளாக உள்ளவர்களுக்குச் சொந்த நாட்டுக்குத் திரும்பினால் முன்புபோல் இருக்க முடியுமா என்ற அச்சம் இருக்கிறது. தமிழர்களின் நிலங்களைப் பறித்து சிங்களர்களுக்கு இலங்கை அரசு கொடுக்கிறது. இதனைத் தடுத்து, அகதிகளாக இருந்து திரும்பும் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் இந்திய அரசு செய்து கொடுக்க வேண்டும்.

பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அது தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மீனவர் பிரச்னைக்குத் தீர்வு: இரு நாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன் பிடிக்காமல், வங்காள விரிகுடா, அரபிக் கடலின் ஆழ் பகுதிக்குச் சென்று மீன்பிடித்தால் மீனவர்களுக்குள் பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. பாரம்பரிய படகுகளின் மூலம் மீன் பிடித்தபோது பிரச்னை ஏற்பட்டது இல்லை. ஆனால் அதி நவீன படகுகள் மூலம் பவளப் பாறை உள்பட கடலின் இயற்கை வளங்களைச் சுரண்டி செல்லத் தொடங்கியபோதுதான் பிரச்னைகள் வரத் தொடங்கின. அது இப்போதும் தொடர்கின்றன.

மரண தண்டனை:  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பத்தினர் என்னைச் சந்தித்துப் பேசினார்கள். பல்வேறு வழக்குகளில் மரண தண்டனை கொடுக்கப்பட்டாலும், 1976-ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்று அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம்.

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதிகம் பேச முடியாது. 13-ஆவது திருத்த சட்டத்தால் தமிழர்களுக்கு பயன் எதுவும் இல்லை. எனினும், அதையாவது இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்கு நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்தது ஆறுதலாக இருந்தது.

இந்தச் சுற்றுப் பயணத்தில் தமிழகத் தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. இதற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றார் அவர்.

TAGS: